Wednesday, 14 November 2012

என் மாநகர பேருந்து அனுபவங்கள்

எங்கள் நடத்துனர், ஓட்டுனர் ( மாநகர பேருந்து)
பேருந்து பயணத்தை தவிர்க்க பெண்களுக்கு காரணங்கள் உண்டு. ஆனால், எனது  தொலைதூர கல்லூரி படிப்பு மாநகர பேருந்து பயணத்தை அவசியம் ஆக்கி விட்டது. அழுக்கேறி இருக்கும் பல பேருந்துகளை,  மழையும் வெயிலும் அவ்வப்போது சுத்தப்படுத்தும்.   மழை காலத்தில் பேருந்திற்குள்ளும் மழை இருக்கும் என்பது பயணியை கவிதை எழுத வைக்கும்(???).   பேருந்தில் ஏறியவுடன் இடம் கிடைப்பது மிக அரிது; சில நேரங்களில் இடம் கிடைத்தாலும் உட்கார தயக்கம் காட்டும் அளவிற்கு பொத்தலாகி இருக்கும். நின்று கொண்டு வருவதோ விண்வெளி பயணம் போல, விண்வெளி கற்கலாக யாரை, எப்போது தடாலென மோதி விழுவோம் என்று தெரியாது.
கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பரவாயில்லை; ஆனால், பல சந்தர்ப்பத்திலும் வியர்வை மணக்கும்கூட்ட நெரிசலிலும் சிட்டாய் பறந்து, முட்டி, மோதி, நடந்தும், தாவியும் நடத்துனர் பயணச்சீட்டை தருவார். நடத்துனருக்கு தனி சீட் இருந்தும் பொதுவாக அதில் அவர் அமர்ந்து பயணிப்பதை பார்த்ததில்லை; "பதட்டத்துடன் தான் எப்போதும் இருப்பாரோ" என்று அவர்களில் முகம் பார்க்கதோன்றும். எப்போதேனும் நகைச்சுவை உதிர்ப்பார்கள் சிலர்.
வாகன நெரிசல் மிகுந்த தார் சாலைகள், குறுகிய, கரடு முரடான, மேடு பள்ளம் கொண்ட சாலைகள், மழை நீர் தேங்கிய சாலைகள் என சகல சொர்க்க- நரகத்தையும் பார்க்கும் ஓட்டுனர்கள் திறமையே திறமை.

அம்மா மீன் கழுவும் இடத்தில் கூட நிற்க மாட்டேன். சிறுவயதில் மீன் கடையில் வாந்தி எடுத்த அனுபவமும் உண்டு (எவருக்கும் தெரியாது இன்றுவரை). பேரூந்து பயணத்தில் வயிறு காய்ந்து, வெயிலில் கறைந்து, தலையில் டவல் சுற்றோடு அவசர அவசரமாய் பெண்கள் ஏற்றும் "மீன் கூடைகள்" அதில் வழிந்தோடும் நீர், எப்படியோ என் அருவருப்பை நீக்கிவிட்டது.
கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பரவாயில்லை; ஆனால், பல சந்தர்ப்பத்திலும் சிட்டாய் பறந்து, முட்டி, மோதி, நடந்தும், தாவியும் நடத்துனர் பயணச்சீட்டை தருவார். நடத்துனருக்கு தனி சீட் இருந்தும் பொதுவாக அதில் அவர் அமர்ந்து பயணிப்பதை பார்த்ததில்லை; "பதட்டத்துடன் தான் எப்போதும் இருப்பாரோ" என்று அவர்களில் முகம் பார்க்கதோன்றும். எப்போதேனும் நகைச்சுவை உதிர்ப்பார்கள் சிலர்.
2002. ஆளும்  ஜெயலலிதா அரசு பேருந்து கட்டணம் உயர்த்தியது; அவை பரிட்சை நாட்கள் என்பதால், மாணவர்கள் நாங்கள், மாத கட்டண அட்டை பெறவில்லை. பயணச்சீட்டு வாங்க தேர்விற்கு காலையில் கொடுத்த கட்டணத்தில், மாலையில் 2 ரூபாய் அதிகம். சக தோழியுடன் பயணம் செய்ததால் பயணச்சீட்டு பெற முடிந்தது. மேலும், ஓட்டுநர், நடத்துனர் பல நாட்கள் வேலை நிறுத்தத்தில் இருந்ததால், அனுபவமற்ற ஓட்டுனர்- நடத்துனர் துணைகொண்டு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன.  அப்போது தெரிந்தது அரசு நடத்துனர்-ஓட்டுனர் அருமை; மறுநாள், முன்னின்ற வேறொரு வாகனத்தை கடக்க முடியாமல் பேருந்து பாதியில் நின்றது.

மீண்டும், 2006 ல் ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்து ஊழியர் மிக கடுமையான அடக்குமுறைக்கு நடுவே போராட்டம் நடத்தினர். அப்போது முதுநிலை பட்டப்படிப்பு படித்து கொண்டிருந்த நானும் என் தோழியும் பேருந்தில் ஏறி அமர்ந்து மாத கட்டண அட்டவணையை நடத்துனரிடம் காட்டினோம். கூட்டம் அதிகமாக இல்லை; அவர் எங்களிடம் கேட்டார், "இப்படி கொஞ்சம் பணம் கொடுத்து அட்டை வாங்கி ட்ராவல் பண்றீங்களே, எங்க போராட்டம் வெற்றி பெறலைன்னா, இதெல்லாம் முடியாது". சிறிது இடைவெளிக்கு பின் சொன்னார், "ஸ்டூடெண்ட்ட்ஸ் கொஞ்சம் யோசிங்க". என் தோழி சொன்னாள், "ஆமால்ல". சொல்லிவிட்டு அவள் வேடிக்கைபார்க்க ஆரம்பித்தாள்; எனக்குள் ஏற்படுத்தப்பட்ட குற்ற உணர்வோடு சிந்தினையில் மூழ்கினேன். பிரச்சினைகள் தெரிந்த அளவிற்கு செயல்பாடோ, தீர்வோ தெரியவில்லை;

ஒரு கசப்பான அனுபவம். மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது இறுதி ஆண்டின் ப்ராஜக்ட் ரிப்போர்ட். அன்று  தண்ணீர் குடிக்க கூட நேரமில்லை; கொளுத்தும் வெயிலில் அங்கும் இங்குமாய் பேருந்தில் பயணிக்க வேண்டியதாக இருந்தது; காலம் குறைவு; பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்கவில்லை; நடத்துனரை பார்த்து "ஏன் நிறுத்தாம போறிங்க"... என்றதும்.. அவர் முறைத்து பார்த்தார்.  மிகுந்த எரிச்சல். "நிறுத்தறீங்களா இல்லையா".. அவர் முறைத்து கொண்டே விசில் அடித்தார். இறங்கும் போது எதோ சொன்னார். தெரியவில்லை; ஆனால் இறங்கிய நான் எதோ கத்தினேன். என்னவென்று நினைவில்லை; (அரசு பணியாளரை யார்வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஏதேச்சாதிகாரம் செய்யலாம் என்று சமூகம் கற்றுக்கொடுத்த திமிர் வெளிப்படுத்தினேன். வருத்தம்)

எந்த கூட்ட நெரிசலிலும் பல சந்தர்ப்பங்களில் இளவட்டங்களுடன் நடத்துனரின் உரையாடல் சுவையானதாக இருக்கும்.  அன்றாடம் பயணிக்கும் பேருந்து; அந்த நடத்துனர் பரிச்சயப்ப்ட்டவர்..(எப்போதும் கத்திக்கொண்டே வருவார்)... சொன்னார்."டேய் பசங்களா.. ஏண்டா உயிர வாங்குறீங்க... படியில நிக்காதீங்கடா. விழுந்து சாவீங்கடா...".. படிக்கட்டில் இருந்து குரல் வந்து "அண்ணே, நீங்க ப்ளட் பிரஷரில் சாவாதீங்க அண்ணே. கூலா இருங்கண்ணே"... அவர் வேகமாக வந்தார்... "எவன்டா அவன்.. எவன்டா பேசனது.. மரியாதயா சொல்லுங்க..." அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை;

அதன்பிறகு பல வருடங்கள் மாநகர பேருந்தில் பயணிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை; நவம்பர் 7 அன்று பேருந்து பயணம் பலவற்றையும் நினைவில் கொண்டுவந்தது; நடத்துனரிடம் "டிக்கெட் எவ்ளோ?" என்று கேட்டேன். அவர் சொன்னார், "உங்க கிட்ட எவ்ளோ இருக்கோ, அவ்வளவும் கொடுங்க"..இது சிரிக்க வைக்கவா, சிந்திக்க வைக்கவா.. அந்த அரைமணிநேர பயணம் முழுவதும் அவர் குரல் கலகலப்பாக யாருடனோ பேசிவருவதை உணர்த்தியது; மாநகர பேருந்து வாழ்க்கையோடு கலந்துவிட்டதாக எழுந்த எண்ணம் இந்த கட்டுரையை எழுத தூண்டியது.

No comments:

Post a Comment