Tuesday, 18 March 2014

தற்கொலை

"தற்கொலை" என்பது தன் வாழ்வாதாரத்தை சிதைக்கின்ற தனிப்பட்ட நபருக்கோ, சொந்தங்களுக்கோ, சமூகத்திற்கோ எதிராக ஒரு தனிநபரால் கொடுக்கப்படும் தண்டனை; காட்டப்படும் கோபம்; கவன ஈர்ப்பு தீர்மானம்;

Saturday, 15 February 2014

'காதலி' ஜென்னி மார்க்ஸ்

கார்ல், நீ என்னை வெகு வினோதமாக, வெகு மென்மையாய்க பார்க்கிறாய். நீ என்னிடம் கேட்பது போலவும், அல்லது என்னிடம் கூறுவது போலவும், அடிக்கடி பல விஷயங்கள் எனக்குத் தோன்றுகின்றன. அதன்பின் நான் விவரிக்க முடியத அற்புதமான உணர்ச்சிப் பெருக்கினால் இழுத்துச் செல்லப் படுகிறேன்.
- ஜென்னி மார்க்ஸ்

# இத்தனைக் காதலுக்கும் சொந்தக்காரராக நெடுங்காலம் ஒரு சமூக போராளியாகத் தான் இருக்க முடியும் #

இந்த பூக்கள் விற்பனைக்கல்ல - வைரமுத்து

20 ஆம் நூற்றாண்டின் கவிதை ரசிகர்கள் வைரமுத்துவை புறக்கணித்திருக்க முடியாது;
மெஹந்தி டிசைன் புத்தகம் தேடப் போய்.. பள்ளிப்பருவத்திலோ, கல்லூரி நாட்களிலோ படித்த இந்த கவிதை புத்தகம்...இன்று கண்களில் பட்டது;
அந்த கால்கட்டத்தின் என்னுடைய சிந்தனை, ரசனை, அறியாமை, வேகம், விவேகம், இளமை எல்லாம் கண்முன் விரிந்தது; இதுதான் கலையின் தாக்கம்.. படித்த புத்தகமோ, ரசித்த இசையோ, உணர்ந்த அந்த காலத்திற்கு இட்டுச் செல்கின்றது.

படித்த கவிதைகளில் பிடித்த வரிகளை அடிக்கோடிட்டிருந்தேன். அவற்றுள் சில என்னுடைய இந்த சூழலுக்கும் மாறாமல் இருந்த கருத்துக்களை கண்டுகொண்டேன்...
உங்களோடும் பகிர்கின்றேன்...

******

அறிவாளியாய் இரு;
முட்டாளாய் நடி;

*****

மூன்று வேளை...
என்னும் தேசிய கீதத்தை
இரண்டே வார்த்தையில் பாடி முடிப்பீர்கள்;
போதாது டாக்டர்.
எங்கள் தேவை
இது இல்லை டாக்டர்.
நோயாளி பாமரன்
சொல்லி கொடுங்கள்.
நோயாளி மாணவன்
கற்ருக் கொடுங்கள்.

*****

ஒருவனுக்கு ஒருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை

*****

கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம்...
எதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை ஏசுகிறது
"சீ! மனிதனே!"

*****

ஒரு நல்ல புத்தகம்
திறந்து கொண்டால்
நரகத்தின் வாசல் மூடப்படும்

*****

வாக்குச்சாவடிக்கு
வரச் சொன்னீர்களே
கைநாட்டேனும்
கையொப்பமானதா?
யோசிக்கத்தான்
வைக்கவில்லை
வாசிக்கவேனும் வைத்தீர்களா?

*****

வாக்குச் சாவடிக்கு
வாகனம் இரண்டு
வாக்களிக்கும்வரை
பல்லக்கு
வாக்களித்தபின்
பாடை

****

முக்கால் பவுனுக்கே
முந்நூறு குறையுதடி.

இந்த லட்சனத்தில்
ஏண்டியம்மா குத்தவச்ச..

*****

நன்றி படுக்கையே..

என்னை
நிராகரியாதிருப்பது
நீ மட்டும்தான்

*****


நெஞ்சுக்குள் எப்போதும்
இப்போதும் எரியும்
இதெ
தீ

*****

பிணங்களுக்காகத்தான்
சுடுகாடு தயாரிக்கப்பட்டது

இங்குதான்
சுடுகாட்டுக்காகவே
பிணங்கள் தயாரிக்கப்பட்டன..

*****

"என்னை மறந்து போ
ஏனென்றால்
இன்னும் உன்னைக்
காதலிக்கின்றேன்"

என் குடும்பம்
நடுத்தர வர்க்கத்து நரகம்

உன் வலது காலை எடுத்து
நீ என் நரகத்துக்குள் வர வேண்டாம்..

*****










"ஆணாதிக்கத்தை புரிந்து கொள்ள பெண்ணை பேச விடு"

நான் படித்துக் கொண்டிருந்த டியூஷனின் ஒருநாள் ஷீபா வந்து சேர்ந்தாள். அப்போதுத் தான் அவளை முதலில் சந்தித்தேன். எப்போதாவது பேசிக்கொள்வோம். அவளுடைய வெளிப்படையான வாய் பேச்சு நட்புக்கு வழிவகுத்தது. ஒராண்டு கழித்து நான் டியூஷன் செல்வது தடைபட்டது. ஆனாலும் அவள் அடிக்கடி வீடுவந்து நட்பை தொடர்ந்தாள்.

"நானே எப்போதும் வருகின்றேன், நீயும் ஒருநாள் வீட்டு வா" என்ற அழைப்பை ஏற்று எப்போதாவது அவள் வீடு சென்றிருக்கின்றேன். வறுமை தெரியும். அவள் பாட்டி தொழுகை செய்வதை பார்த்திருக்கின்றேன். "நீ தொழுவியா?" கேட்டேன். "எப்போதாவது... பாட்டி வற்புறுத்தும்போது மட்டும்." அவள் அம்மா இஸ்லாம். அப்பா இந்து. இப்போது பாட்டி பராமரிப்பில் இஸ்லாமிய "ஷீபா". பள்ளி தோழிகள் கதை, பாட்டு பாடுவது என்று பொழுதை கழிப்போம்.



அப்போது அவள் சுதந்திரமானவள் என்று தோன்றும். ஏன், எப்படி என்று தெரியாது. எப்போதும் அவள் கோவித்து கொள்வாள். மீண்டும் சில நாள் கழித்து அவளே சமாதானம் ஆகி திரும்ப வருவாள். ஒருமுறை நான் கோவித்துக் கொண்டேன். காரணம் புரியாத அவள் கண்ணீரோடு நீண்ட கடிதம் எழுதித்தந்தாள். மறக்க முடியாதவளாகி விட்டாள். நிலப்பிரபுத்துவ வாழ்க்கைமுறையில், ஒரு பெண்ணாக உணர்வுகளை கட்டுப்படுத்தவும், முழுமையாக வெளிப்படுத்தாத மனநிலையில் நான் இருந்த போதும்.. என்னுடைய சில குணாதியங்கள், சிக்கலான தருணங்கள் அறிந்தவள் அவள் மட்டுமே.



பத்தாம் வகுப்பு. அரபு தேசத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவள் தாய், அவளுக்கு தங்க சங்கிலி, வளையல், கம்மல் வாங்கி வந்திருந்தார். அவற்றை அணிந்துகொண்டு எனக்கு காண்பிக்க வீடு வந்தாள். வெளிப்படையாக தெரிந்தது, அவள் திருமணத்திற்கு தயார் படுத்தப்படுகின்றாள்.



12 வகுப்பு. நாங்கள் வேறு வீட்டில் குடியேறினோம். அவளை சந்திக்கும் வாய்ப்பு குறைந்தது. கல்லூரி நாட்களில் ஒரு நாள் தன் "திருமண அழைப்பிதழ்" கொண்டுவந்தாள். உற்சாகம் தெரிந்தது. திருமணத்திற்கு சென்றேன். இஸ்லாமிய திருமணம் பார்ப்பது இதுவே முதல்முறை. அவள் அருகில் அமர்ந்திருந்தாலும் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. சிறிது நேரம் வெளியில் கடைப்பக்கம் நடந்து விட்டு திரும்பினேன். கழுவிய முகம் துடைத்துக் கொண்டே அவள் அழுது கொண்டிருந்தாள்.



"திருமணத்தன்று எப்படி மஞ்சள் பூசலாம்?" மாப்பிள்ளை வீட்டாரின் உறவினர் கேட்க, "அதனால் என்ன, இது எங்கள் ஊர் பழக்கம்" என்று இவர்கள் சொல்ல...சர்ச்சையானது. அவள் அழுதுகொண்டிருந்தாள். பெண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த பொருள் வேண்டுமானாலும் சர்ச்சையாகலாம். யார் வேண்டுமானாலும் சர்ச்சை செய்யலாம்.ஒருவழியாக திருமணம் முடிந்தது.எட்டி நின்று வாழ்த்து கூறி வெளியேறினேன்.



அவள் வெளிமாநிலத்திற்கு கணவனோடு சென்றாள். ஒருவருடம் கழித்து அவளுடன் தொலைப்பேசியில் பேசினேன்.. அவளுக்கு தலைபிரசவம். நான் கல்லூரி முடிக்கும் தருவாயில் அவள் சென்னைக்கு குடும்பத்தோடு திரும்பி வந்தது அறிந்தேன். அவளை பார்க்க சென்றேன். கை குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள். அருகில் அவள் ஒன்றரை வயது மகன் விளையாடிக் கொண்டிருந்தான். விளையாட்டாக சொன்னாள், "அவன் ஆறு மாச கொழந்தையா இருக்கும் போது, ஏதோ சந்தேகம்...டாக்டர் கிட்ட போய் செக் பண்ணேன்... 5 மாசம்னு சொன்னாங்க... டாக்டர் திட்னாங்க... பாவம் இவ வயித்துல இருக்கும்போது, நான் ஒரு சத்து மாத்திர கூட சாப்பிடல.. கொஞ்சம் நோஞ்சான் பிள்ளை போலதான் பொறந்திருக்கா..."



அவளுடைய பழைய உற்சாகம் காணாமல் போயிருந்தது. அவளுடைய மாமனார், மாமியார் அங்கே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருட்ந்தார்கள். உறவு பிரச்சினைகள் நிறைந்த வீடாகவே தெரிந்தது. சிறிதுநேரம் பேசிவிட்டு திரும்பினேன்.



என்னுடைய முதுகலை பட்டப்படிப்பு முடித்து நான் வேலைக்கு சென்றேன். அவள் வீடு மாறி சென்று விட்டாள். எங்கு என்று தெரியவில்லை. ஐந்து ஆண்டுகளாக அவளை பார்க்க முடியவில்லை. ஒருநாள் அதிஷ்டவசமாக வீதியில் அவள் தங்கையை சந்தித்தேன். "நான் கல்யாணம் பண்ணிட்டேன். அவங்களுக்கெல்லாம் பிடிக்கல. என் கிட்ட பேசறதில்ல. அக்கா, அவ நம்பர் தரேன்."

தொலைபேசியில் அழைத்தேன். எதிர்முனையில் அவள் சொன்ன "ஹலோ" வில் ஆரம்பித்து அவள் பேசியது கேட்க, "இது ஷீபா அல்ல; வேறு யாருடனோ பேசிக்கொண்டிருக்கின்றோம்" என்ற தோன்றியது.



சிலநாள் கழித்து என் திருமண அழைப்பிதழ் கொடுக்க அவள் வீடு சென்றேன். உருவத்திலும் பழக்கத்திலும் மாறி இருந்தாள். அவள் சிரித்து பார்க்க கொடுத்து வைக்க வில்லை. அவளுடன் பேசியதில் இது நினைவில் நின்று விட்டது. "கல்யாணம் பண்ணி மொத மூணு வருஷத்துலயே மூணு பிள்ளைங்க ஆயிடுச்சு. அம்மா என்னை டாக்டர்கிட்ட இழுத்துட்டு போய் "காப்பர் - டி" மாட்ட வச்சாங்க. அவருக்கு நான் காப்பர் - டி போட்டிருக்குற விஷயம் தெரியாது. தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆயிடும். அவருக்கு மத நம்பிக்கை ஜாஸ்தி. முஸ்லீம்ஸுல இதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க. அமாவோட பேச்சு இல்ல; தங்கையோட பேச்சு இல்ல; இந்த வீடையே சுத்தி சுத்தி வரேன். வெளியில கடைக்கு கூட போறது இல்ல; இப்போ நாலு வருஷம் மேல ஆச்சு. 'காப்பர் - டி' எடுத்தாகனும்... என்னப் பண்றதுன்னு புரியல... "





"அவருடன் பேசிப்பாரு" என்று சொன்னேன். அது வாய்ப்பில்லை என்பது போல பார்த்தாள். அங்கிருந்து கிளம்பினேன். "இரு. அவர் வர்ற நேரம். இருட்டிடுச்சு. ஆட்டோ பாத்து அனுப்புவாரு." நான் அது மறுத்து, விடைபெற்று நடந்தேன். பேருந்து நிலையம் நோக்கி, அரைமணி நேரம் நடந்தேன்... ஒரு மனிதனையும், உலகின் மாபெரும் ஒரு மதத்தையும் மனதுள் வசை பாடிய படியே.



(என் திருமணத்திற்கு அவள் வரவில்லை; ஒருநாள் அவள் தொலைப்பேசியில் அழைத்தேன். "சுவிட்ச் ஆப்" என்றது. வேறு ஊருக்கு குடிபெயர்வதாக சொல்லிக் கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. மீண்டும் முயற்சித்தேன்... பயனில்லை... இப்போது அவள் எங்கு இருக்கின்றாள் என்று தெரியவில்லை; என்றாவது சந்திப்பேன்... சந்திக்க விரும்புகின்றேன்..)


1084 இன் அம்மா - மகாசுவேதா தேவி

மேற்கு வங்கத்தில் 1967 ல் நிகழ்ந்த "நக்சல்பாரி" எழுச்சிக்குப் பின், நகரங்களையும் ஆட்கொண்ட மார்க்ஸிய லெனினிய கருத்துக்களால் கவரப்பட்டு, சமூக விடுதலைக்கு போராடிய கல்லூரி இளைஞர்களில் ஒருவனின் கதை.

தன் முதலாளித்துவ குடும்பத்தை வெறுக்கும் "ப்ரதி" இறந்தபின், அவ்னை பற்றி நன்கு அறிந்த அவனுடைய நண்பனின் தாயிடமும், அவன் காதலியிடமும், தன் மகனைப் பற்றி, தான் அறியாத விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்கின்றாள், அந்த தாய்.


நாவலை தழுவிய திரைப்படமாக ஹிந்தியில் பார்க்க, 1084 இன் அம்மா

http://www.youtube.com/watch?v=tBuwk0Ti9Kc

"வானவில்" - வாண்டா வாஸிலெவ்ஸ்கா‏



(ரஷ்ய நாவல்)

1944. சில்லிட்டு உறையப்போகும் இதயத்திற்காக, உடலை, உணர்வை தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.பனிக்கட்டிகளின் கடுங்குளிர் நிறைந்த ஜெர்மானியர் ஆக்கிரமித்த ரஷ்ய கிராமம் ஒன்றில் ஓர் இரவில் நாம் பிரவேசிக்கப் போகின்றோம்.


ஒரு மாத காலமாக புதைக்கப்படாமலும் அப்புறப்படுத்தப் படாமலும் ஆங்காங்கே கிடக்கும் பிணங்களுக்கு நடுவே நாம் நடந்து செல்கின்றோம்.

ஆம்.

ஹிட்லரின் நாஜி படைக்கு எதிராக போரிட்டு மடிந்த ரஷ்யாவின் செம்படை வீரர்களின் பிணங்கள் புதைக்க அனுமதியில்லை;


தூரத்தில் தற்காலிக சிறைக்கூடம் அருகே, "ஒலினா" 45 வயது மதிக்கத்தக்க நிறைமாத கர்ப்பிணி, அரை நிர்வாணமாய், இரண்டு ஜெர்மானிய வீரர்கள் பிந்தொடர.. விழுவதும் எழுவதும் நட்ப்பதுமாய் வேதனைப்பட்டு உளரும் வேதனை சத்தம் நம் காதில் விழுகின்றது.

அவள்.... அவளுக்கு தெரிந்த ரஷிய கொரில்லா படையினரின் இருப்பிடம் சொல்வதாக இல்லை;


"அவள் இன்னும் ஒன்றும் சொல்லவில்லை. அவளை குத்து! ஊம் குத்து.."

துப்பாக்கியின் கூர்முனை அவள் உடலில் பாய்கின்றது; நாம் அச்சத்தில் உறந்திட..


ஒலினாவின் முதுகில் இருந்து ரத்தம் வழிந்தோடுவதை பார்க்கின்றோம்.

அத்தகைய பயங்கர இரவை ஜெர்மானியரும் நாமும் கண்டதில்லை... குளிர் காற்று நம் உடலை குத்துகின்றது; ஜெர்மானியரை அச்சுறுத்தும் அந்த மரண பயம் நம்மையும் தொற்றிக்கொள்கின்றது.


அந்த இடத்தை விட்டு அகன்றுவிட துடித்து நாம் வீடுகள் நிறைந்த பகுதிகளில் நடக்கின்றோம். ஒரு தூப்பாக்கிகுண்டின் வெடிச்சத்தம் காதை கிளிக்கின்றது; சத்தம் கேட்டு வீடுகளை விட்டு வெளியில் வரும் மக்களை பார்க்க, படபடக்கும் நெஞ்சத்தோடு காத்துக் கொண்டு இருக்கின்றோம்;


ஏமாற்றம்.

அங்கே எந்த சலசலப்பும் இல்லை; கிராமத்து மக்களுக்கு பழகி விட்டது; அந்த நிசப்தம் மயான அமைதியோடு நம்மை மேலும் அச்சமுற செய்கின்றது;


"என்ன இது? எல்லோரும் உறங்கி விட்டார்களா?" நமக்குள் கேள்வி.


இல்லை. அங்கே ஒவ்வொரு வீட்டின் ஜன்னலுக்கு பின்னாலும் இருள் நிறைந்த அறையில் இருந்து ஒரு ஜோடி கண்களாவது வீதியை பார்த்துக் கொண்டுதான் இருந்தது. ஒரு வீட்டை கடக்கும்போது, தணிந்த பேச்சுக்குரல் கேட்கின்றது.


"இவனை நாம் இங்கேயே புதைக்க வேண்டும்" ஒரு தாயின் குரல்.


"நம் வீட்டிலா?" ஒரு சிறுமியின் குரல்.

"வேறு எங்கே? தன் வீட்டில் அவன் படுத்துறங்குவான்.அவனை தாழ்வாரத்தில் புதைக்கலாம்"


ஆவல் மிகுதியால் அந்த வீட்டின் ஜன்னலை விலக்கி எட்டிப்பார்க்கின்றோம். மங்கிய வெளிச்சத்தில், ஒரு மேசைமேலே சின்னஞ்சிறு சிறுவன் "மீஷ்கா" குண்டடிபட்ட ரத்தக்கறையோடு படுக்க வைக்கப்பட்டுள்ளான். சில நிமிடங்கள் முன், அவன் கடைசியாக பேசிய வார்த்தைகள்,


"ஒலினா அத்தே! உனக்கு ஒரு துண்டு ரொட்டி கொண்டு வந்திருக்கேன், இதோ"

ஜெர்மானிய காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு சாக்கடையில் எறியப்பட்ட தன் 10 வயது மூத்த மகன் மீஷ்காவின் பிணத்தை, மிக சாதுர்யமாக, தரையில் வயிற்றால் ஊர்ந்து, கஷ்டம் சகித்து, ரோந்துவரும் ஜெர்மானியருக்கும் தெரியாமல், வீட்டிற்கு கொண்டுவந்து சேர்த்தாள். அந்த தாய்க்கு தன் மகனின் சாவிற்காக அழ கூட நேரமில்லை; விரைந்து மகனின் பிணத்தை புதைக்க வேண்டும்.


நாம் நினைவில் கொள்கின்றோம்.

"ஜெர்மானியர் பிணங்களை புதைக்க அனுமதிப்பதில்லை" மீஷ்காவின் சவ அடக்கம் முடிந்தது;


"குழந்தைகளே! படுத்துக்கொள்ளுங்கள். நாம் சிறிது நேரமாவது தூங்க வேண்டும்"


கனத்த இதயத்தோடு அந்த வீட்டை கடந்து வருகின்றோம். குளிர்காற்று நம்மை மோதித் தள்ளுகின்றது. தூரத்தில் ஒரு பெரிய மரத்தில் ஒரு இளைஞனின் பிணம் கயிற்றில் தொங்கியபடி ஆடிக்கொண்டு இருக்கின்றதை பார்க்கின்றோம்.அந்த ஊரை விட்டு சீக்கிரமே வெளியேற துடிக்கின்றோம்...


பொழுது புலர்கின்றது; பகல் மாறுபட்டு இருக்கின்றது; ஒலினாவின் பிரசவம்; சிறுவனின் பிணம் பற்றிய விசாரணை; ஜெர்மானியர் உணவிற்காக தானியம் தராத கிரமத்தினர் ஒற்றுமை; இரவில் கிராம நீதிமன்றம் இரகசியமாய் செயல்பட்டு மரணத்தை தண்டனையாய் தருவது; ஆகிய நிகழ்வுகள் செம்படை வீரர்களின் வரவு வரை நீண்டாலும்...


அந்த ஒரு இரவு.. இதயம் சில்லிட்ட அந்த ஒரு இரவு.... நம் நினைவை இன்றும் சில்லிட்டு இருள்கின்றது...