Wednesday, 22 July 2015

மூன்று பெண்கள் ( பகுதி - 1)



இடம்: ரோஹினி வீடு
நேரம் : மதியம்

(ரோஹினி வீட்டிற்குள் நுழைகின்றாள். அவளோடு
கமலாவும் கைகளில் கோப்புக்களோடு வருகின்றாள்.மீனாட்சி டேபிள் துடைத்து கொண்டிருக்கின்றாள்)

ரோஹினி : (அலைபேசியில்)  மாமா,, அன்னைக்கு நான் சொன்னேனோ இல்லியோ, எஜிக்கேஷன் மினிஸ்டர் பெரியவாளோட தீவிர பக்தர்...  எப்டி எங்கே பிடிச்சா சைன் கெடைக்கும்னு எனக்கு தெரியும்...
ஃபைல் ரெடியாயிடுத்து ...மாமா...
இனி அடுத்த ப்ரொசீஜர் பாப்போம்.. மாமா.

(கமலா கோப்புகளை சரி பார்த்து கொண்டிருக்கின்றாள். )

ரோஹினி : மாமா, ஒன் மினிட்...
(மீனாட்சியை பார்த்து)
மீனா, என்ன பண்ண போறா..

மீனாட்சி: அக்கா, நான் சாமி ரூம் தூசி தட்டப் போறேன்.

ரோஹினி: இரு. நான் பேசி முடிச்சுண்டு வரேன்.

மீனாட்சி : சரிக்கா.

ரோஹினி : ஆங்... மாமா ஈவ்னிங் பார்ட்டில பாக்கலாம். மாமிக்கிட்ட சொல்லிடுங்கோ.. நான்
க்ரீன் கலர் சாரில வரேன். அவர வேற கலர்ல சாரிக்கட்டிக்க சொல்லுங்கோ. இல்ல.. நீங்க மாமிய கூப்புடுங்கோ.. நானே சொல்ரேன்.
(காத்திருந்து...)

---------------------------------------

 
 

(மீனாட்சி கண்களில் கண்ணீரை துடைத்துக்கொண்டே நடக்கின்றாள். ஹாலிலிருந்து, ரோஹினி 'காபி கொண்டுவா' என்று கேட்க, 'சரிக்கா' என்று கண்ணீரை துடைத்தபடியே சொல்கின்றாள்; கமலா வீட்டிற்குள் வ்ந்துவிடுகின்றாள். கமலாவும் ரோஹினியும் ஃபைல் சம்பந்தமாக பேசிக்கொள்கின்றார்கள்; மீனாட்சி பாலை சூடு பண்ணுகின்றாள்.கமலா சமையலறை வருகின்றாள். )
 
கமலா: மேடம், என்னை அவங்களுக்காக காபி கொண்டு வர அனுப்பினாங்க. உள்ளே வரலாமா...
 
மீனாட்சி: (மலர்ந்த முகத்துடன்) வாங்க, வாங்கக்கா.. எவ்ளோ நாளாச்சி.. இந்த பக்கம் வந்து... வீட்டுக்காரர் கெளம்பிட்டாரா..
 
கமலா: இல்ல மீனாட்சி, அதான் மனசெல்லாம் வீட்டுலேயே இருக்கு; இந்த சனிக்கிழமை கெளம்பறாரு;
 
மீ: அக்காகிட்ட லீவ்கேட்டு, அவங்களும் சரின்னு சொல்லி ரொம்ப சந்தோஷமா இருந்தீங்க;
 
கமலா: (வாசல்பக்கம் பார்த்தபடி) எங்க, அதெல்லாம் நல்லாத்தான் லீவ் கொடுத்தாங்க,' முக்கியமான வேலைன்னா மட்டும் வா' ந்னு சொன்னாங்க. நானும் ஊரு, கோயிலுன்னு ப்ளானெல்லாம் போட்டு வச்சேன்.
 
மீ: ம்ம்ம்
 
கமலா: எம் புருஷன் வந்தன்னிக்கு மதியானமே வீட்டுக்கு கார் அனுப்பிட்டாங... முக்கியமான வேல வான்னு..
 
மீ: ம்ம்ம்
 
கம: அன்னிலருந்து, இந்த முக்கியமான வேலையத்தான் முக்கி முக்கி பண்ணிட்டு இருக்கேன். என்ன பொழப்பு இது...சே..
 
மீ:அட, அக்கா நீங்க வீட்டுப்பக்கம் வரலியா,, நானும் நீங்க லீவ்ல இருக்கறதா நெனச்சிட்டேன்.
 
கம: இல்லம்மா.. ஃபுல்லும் ஸ்கூல்லயே இருந்து வேல செய்ய வேண்டியதாயிடுச்சி.
 
(மீனாட்சி மூன்று டம்ளர்களில் காபி கலக்குகின்றாள்)
 
மீ: கஷ்டந்தான்...
கமலா: நாய் வேஷம் போட்டா கொலச்சிதான் ஆகனும்; சம்பளம் வாங்கினா.. சொல்ற வேலைய
செஞ்சிதான் ஆகனும்.. அவருக்கு மட்டும் நிரந்தரமா இங்கேயே வேல இருந்திருந்தா.. நான் ஏன் இந்த பொழப்புக்கு வரேன்.   போற இடம் எல்லாம் ஒவ்வொருத்தனுக்கும் பல்லிளிச்சி..
(சுவற்றை வெறித்து பார்த்திருக்கும் கமலா முகத்தில் கவலைகோடுகள்)
 
மீ: சரியா சொன்னீங்க, இந்த காலத்துல காசு இல்லைன்னா பொணத்த துக்க கூட ஆள் இல்ல... எங்க கிராமந்தான் அடிக்கடி கண்ணு முன்னாடி வருது..
 
(கமலா கையில் காபியை பெற்றுக்கொண்டு, ஹாலுக்கு செல்கின்றாள்)
 
 
 ----------------------------------

(மீனாட்சி சமையலறை அருகில் இருக்கும் பின்முற்றத்தில் குழாயில் தண்ணீர் பிடித்து தன் புடவையின் ஒரு பகுதியை கசக்கி கொண்டிருந்தாள். கமலா திரும்ப வருகின்றாள்.)

மீ : அக்கா, காபி ஆறிட போது, சூடா எடுத்து குடிங்க.

கமலா : (காபி குடித்தபடி ) நீ குடிக்கலையா...சூடா..
 
மீ: ஹா ஹா... நான் என்னிக்குக்கா காபி சூடா குடிச்சிருக்கேன். சின்ன வயசுல காபி தண்ணியெல்லாம், பெரியவங்க குடிக்கும்போது..கொஞ்சமா குடிச்சி பாத்திருக்கேன்.  அப்படியே பொட்டபுள்ளைங்க நமக்கு தந்தாலும் கடைசியா ஆறிப்போய் தண்ணியாத்தான் தருவாங்க. காபி, டீ எல்லாம் சூடா குடிக்கனும்னு இந்த வீட்டுக்கு வந்தப்பறம் தான் தெரியும். அப்படியே ச்சுடு இல்லாம குடிச்சி பழகிடிச்சி.
 
கம: என்னா... அப்போ.. ஸ்பெஷலா கோல்டு காபியா...
 
(இருவரும் சிரிக்கின்றார்கள்)
 
மீ: நீங்க வந்த ஒடனேயே கேக்கனும்னு நெனச்சேன். இந்த பொடவையெல்லாம் உங்களுக்குன்னே கடைல ஸ்பெஷலா விக்குதா. எவ்ளோ அழகா இருக்கு. நாங்கல்லாம் கட்டுனா இவ்ளோ பவுசு வரது இல்லையேக்கா...
ஒருவேளை நீங்க அழகா இருக்கறதுனாலா.. கண்ணுக்கு புடவையும் அழகா தெரியுதோ.
 
கம: (புன்னகைத்தபடி) நீ கிண்டல் பண்றியா... மீனாட்சி.
 
மீ: நெசம்ம்மா தான்க்கா.. நீங்க ரொம்ப அழகு. பின்ன இல்லாமலா. சாரு உங்கள லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்காரு.
 
கம: ஹா ஹா ஹா. அப்போ லவ்ன்னா அழகு தேவைன்னு சொல்ற...
 
மீ:  (வெட்கப்பட்டு கொண்டே) பொம்பளகிட்ட ஆம்பிள மனச கொடுக்கறதே ஒடம்ப வாங்கத்தான்..
 
கமலா: அப்போ..ஆம்பளகிட்ட பொம்பள மனசு கொடுக்கறது...
 
மீ: அது எனக்கு தெரியாது; ஆனா.. ஆம்பளகிட்ட பொம்பள ஒடம்ப கொடுக்கறதே... மனச வாங்கத்தான்.
 
கமலா: நல்லா சொன்ன...
என்ன ஒரே தத்துவ மழையா பொழியுது. (நக்கலாக)இதெல்லாம் யாரு கண்ணு உனக்கு சொல்லி தர்றது.
 
மீ: எல்லாம் வாழ்க்க பாடந்தான்... உங்க லவ் பத்தி ஒருநாள் சொல்லுங்கன்னு எவ்ளோ நாளா கேக்கறேன்...
 
கமலா: நீ சொல்ற் தத்துவமெல்லாம் சரியா தப்பான்னு என் வாழ்க்கைய வச்சு சொல்ல முடியாது மீனாட்சி. நாங்க ரெண்டு பேரும் ஒரே காலேஜ் படிச்சோம். அது ப்ரெண்ட்ஷிப்பா லவ்வான்னு எல்லாம் யோசிச்சு பாக்கல. ஆனா, மாஸ்டர் டிகிரி படிக்க போறேன்னு சொன்னப்ப... வீட்டுல கால ஒடச்சுருவேன்னு.. அப்பா கத்தி ரகள பண்ணி... கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பாத்தப்ப தான் மொத மொதல்ல தோணுச்சி... என்னால இவரத்தவிர வேற யார்கூடயும் வாழ முடியாதுன்னு.
வீட்டுல பொண்ணு பாக்கற படலம் ஒருபக்கம் நடந்துச்சு. நானும் இவரும் ஒரு கோயில்ல சந்திச்சு பேசினோம். அது வெறும் ப்ரெண்ட்ஷிப் இல்லன்னு பேசும்போதும் பாக்கும்போதும் புரிஞ்சிது.
 
மீ: ம்ம்ம்
 
கமலா: அப்போ இவருக்கு நல்ல வேல இல்ல. வேற சாதி. ஆனாலும்.. ஆளு லேசுபட்ட ஆளு இல்ல. அடுத்த நாளே வீட்டுக்கு வந்து அப்பாகிட்ட 'நானும் உங்க பொண்ணும் சேந்து வாழனும்னு நெனக்கிறோம்; நீங்க கமலாவ மேல படிக்க வைங்க;  அது அவளோட கனவு; இப்போ தான் அப்பா தவறி இருக்கார்; நான் ஒடனே கல்யாள பேச்சு பேசினா.. எங்கபக்கம் நல்லாருக்காது; நானும் ஒரு நல்ல வேல தேடி கௌரவமா நாங்க வாழ முடியும்..."
 
மீ: யம்மாடியோ... ரொம்ப தெயிரிய்னதான்..
 
கமலா:(சிரித்தபடி) ஆமா...
 
மீ: அப்பா என்ன சொன்னார்.
 
கமலா: அப்பா... வாய் நெறய வெத்தல போட்டிருந்தார். மொத்தத்தையும் அவர் மூஞில துப்பிட்டார்...சாதி பேர் சொல்லி 'வெளியே போ' நு கத்தினார். நான் என் என்னோட துணிங்கள கொஞ்சம் அள்ளிட்டு...வெளிய வந்து நின்னேன். அம்மாவையும் தங்கையையும் பாத்தேன். கண்ணாலேயே 'போ'னு சொன்னாங்க. கெளம்பிட்டோம்.
 
மீ: ம்ம்ம்
கமலா: அப்போ அதுக்கு முன்னாடி ப்ரெண்ட்ஸா இருந்தோம்ங்கறது மறந்திருந்துது... இப்போ இவ்ளோ வேகமா காதலிச்சிருக்கோம்னு மறந்திருக்கு.. மீனாட்சி. அது லவ்வான்னு எல்லாம் சொல்ல தெரியல.
இப்போ.. வாழ்க்கை எங்க பின்னாடி தொரத்த, நாங்க வாழ்க்கைய தொரத்தன்னு... வாழ்க்கை படு போராட்டமா இருக்கு;
 
மீ: ம்ம்ம்
 
கமலா: அவரு மஸ்கட்ல போய் ஒழைக்கறதும் நான் இங்க ஒழைக்கறதும்.. எங்க பிரிவும்.. ரெண்டு பிள்ளைங்களும்..வாடக... பிஸ்.. மாத்திரை, மருந்து, மளிகைன்னு... இப்படியே போனாலும்.. எல்லாத்துக்கும் நடுவுல... நானும் அவரும் போன்ல பேசிக்கிறப்போ...'ரொம்ப கஷ்டமா இருக்கா'ன்னு நான் அவர கேக்கறதோ, அவரு என்னை கேக்கறதோ... இருக்குன்னா.. இது தான் மீனாட்சி லவ்.
 
மீ: (கனிவான முகத்தோற்றத்தோடு.. கன்னத்தில் கைவைத்தபடி) ம்ம்ம்ம்

 கமலா: என்ன பாக்கற.. புதுசா பாக்கற மாதிரி...

மீ: (பெருமூச்சு விட்டபடி... ) ம்ம்ம் புதுசா பாக்கற மாதிரி தான் இருக்கு; (சற்றே உயர்ந்த குரலில்) பொறாமையா இருக்குக்கா...

கமலா: (சிரித்தபடி) எதுக்கு...

 (கமலாவின் புன்சிரிப்பு, மீனாட்சியின் சோகமான முகம் பார்த்து... மாறி மறைகின்றது)

கமலா: (பேச்சை மாற்றும் விதமாக) என்ன மீனாட்சி,பொடவையில இவ்ளொ தண்ணி சொட்டுது..

மீ: இல்ல, கரையா இருந்துது... அதான் கொஞ்சம் சோப்பு போட்டு அலசினேன்.

கமலா: நீ இந்த பேட் எல்லாம் யூஸ் பண்ண மாட்டியா?

மீ: அட... நீங்களுமா. அத்தோட... அது விக்கற விலைக்கு நாங்க ஒருநாள் சோரு தின்னுவோம். இது எம்புள்ள ரத்தக்கா... தலையில அடிபட்டுடுச்சு...

கமலா: அய்யோ.. என்னாச்சு.. இப்போ எப்படி இருக்கான்.

மீ: தெரிலக்கா.. காலையில நான் கெளம்பற நேரம்.அவன தூக்கிட்டு ஆஸ்பத்திரி எல்லாம் தனியா போக நேரமில்லை; அப்படியே.. அம்மா விட்டுக்கு போய் தங்கச்சியயும் கூட்டிட்டு.. சுகாதார மையத்துக்கு போனேன். ஒரு நர்சு கூட இல்ல.. அவ்ளோ காத்தால யாருக்கா இருப்பா...

கமலா: ம்ம்ம்

 மீ: அவங்களுக்கு ஒரு பாக்கேட்டு ரொட்டி மட்டும் வாங்கி கொடுத்துட்டு நான் இங்கே வந்துட்டேன்.

கமலா: அடிப்பாவி.. அவன் இப்போ எப்டி இருக்கான்?

மீ: அதான்கா உங்ககிட்ட இல்லைன்னா அக்காகிட்ட கேட்டு ஒரு போன் மட்டும் பேசிடலாமுன்னு யோசனையா இருந்தேன்.

கமலா: இந்தா மொதல்ல பேசு. மேடம் அப்போவே மாடிக்கு போய்ட்டாங்க; தூங்கியிருப்பாங்கன்னு நெனக்கிறேன். இல்லன்னா நாம பேசிட்டு இருக்கறது வம்பாயிடும். பாத்துட்டு வரேன்.

மீ: (மொபைலை வாங்கியபடியே) சரிக்கா
.
  ----------------------------------------

மூன்று பெண்கள் ( பகுதி -2)

மீ: (கனிவான முகத்தோற்றத்தோடு.. கன்னத்தில் கைவைத்தபடி) ம்ம்ம்ம்

 கமலா: என்ன பாக்கற.. புதுசா பாக்கற மாதிரி...

மீ: (பெருமூச்சு விட்டபடி... ) ம்ம்ம் புதுசா பாக்கற மாதிரி தான் இருக்கு; (சற்றே உயர்ந்த குரலில்) பொறாமையா இருக்குக்கா...

கமலா: (சிரித்தபடி) எதுக்கு...

 (கமலாவின் புன்சிரிப்பு, மீனாட்சியின் சோகமான முகம் பார்த்து... மாறி மறைகின்றது)

கமலா: (பேச்சை மாற்றும் விதமாக) என்ன மீனாட்சி,பொடவையில இவ்ளொ தண்ணி சொட்டுது..

மீ: இல்ல, கரையா இருந்துது... அதான் கொஞ்சம் சோப்பு போட்டு அலசினேன்.

கமலா: நீ இந்த பேட் எல்லாம் யூஸ் பண்ண மாட்டியா?

மீ: அட... நீங்களுமா. அத்தோட... அது விக்கற விலைக்கு நாங்க ஒருநாள் சோரு தின்னுவோம். இது எம்புள்ள ரத்தக்கா... தலையில அடிபட்டுடுச்சு...

கமலா: அய்யோ.. என்னாச்சு.. இப்போ எப்படி இருக்கான்.

மீ: தெரிலக்கா.. காலையில நான் கெளம்பற நேரம்.அவன தூக்கிட்டு ஆஸ்பத்திரி எல்லாம் தனியா போக நேரமில்லை; அப்படியே.. அம்மா விட்டுக்கு போய் தங்கச்சியயும் கூட்டிட்டு.. சுகாதார மையத்துக்கு போனேன். ஒரு நர்சு கூட இல்ல.. அவ்ளோ காத்தால யாருக்கா இருப்பா...

கமலா: ம்ம்ம்

 மீ: அவங்களுக்கு ஒரு பாக்கேட்டு ரொட்டி மட்டும் வாங்கி கொடுத்துட்டு நான் இங்கே வந்துட்டேன்.

கமலா: அடிப்பாவி.. அவன் இப்போ எப்டி இருக்கான்?

மீ: அதான்கா உங்ககிட்ட இல்லைன்னா அக்காகிட்ட கேட்டு ஒரு போன் மட்டும் பேசிடலாமுன்னு யோசனையா இருந்தேன்.

கமலா: இந்தா மொதல்ல பேசு. மேடம் அப்போவே மாடிக்கு போய்ட்டாங்க; தூங்கியிருப்பாங்கன்னு நெனக்கிறேன். இல்லன்னா நாம பேசிட்டு இருக்கறது வம்பாயிடும். பாத்துட்டு வரேன்.

மீ: (மொபைலை வாங்கியபடியே) சரிக்கா
.
  ----------------------------------------


(கமலா டைனிங் ஹாலை கடந்து வரும்போது, ரோஹினி அலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டு படிக்கட்டில் இறங்கி வருவதை உணர்கின்றாள். தன் புடவையை சீராக இருக்கின்றதா என்றும் தன் முகத்தை அங்கிருந்த கண்ணாடியில் பார்த்துவிட்டு, முகத்தோற்றத்தை பணிக்கேற்ப மாற்றிக்கொண்டு ஹாலுக்குள் வருகின்றாள்.)

ரோஹினி: சரிக்கா... ஹாஸ்பிடல் கூட்டிண்டு போக்கா. அத்திம்பேர் ஹாஸ்பிடலே தான். ஒன்னும் ஆகாது....
..just fever akka..
 ரெண்டு தட வாந்தி எடுக்கறதெல்லாம் பிரச்சினையா.
.....
எனக்கு இப்போ அங்கெ வர முடியாது..
ம்ம்ம்...
ஈவ்னிங் பார்ட்டி...இவரு சொந்தக்காரர் ஃபங்க்ஷன்..
....
நான் போகலைன்னா.. ஒவ்வொன்னும் ஒவ்வொன்னு பேசும்...
 சரிக்கா.. பாத்துக்கோ...
 
(ரோஹினி டைனிங் ஹாலுக்குள் நுழைந்தாள். கமலா அவளை பின் தொடர்ந்தாள்)
 
ரோஹினி: மீனா..
 
மீ: அக்கா, இதொ வரென்க்கா.
 
ரோஹினி: சாப்பாடு மீனா...
 
மீ: இதோக்கா.
ரோஹினி: கமலா, நீயும் சாப்டிடு.
 
கமலா: சரி மேடம்.
 
ரோஹினி: மீனா, சமச்சு முடிச்சு எத்தனை மணிக்கு கெளம்பினாரு?
 
மீ: ஒரு 12 இருக்கும்க்கா..
 
(ரோஹினியின் அலைபேசி அழைப்பு வருகின்றது)
 
ரோஹினி: ஹலோ;
சொல்லுங்க. டெல்லி எல்லாம் எப்படி இருக்கு.

.
ம்ம்ம்
..
அந்த வேல கிட்ட தட்ட முடிஞ்சுடுத்து; இன்னைக்கு signனும் வாங்கிட்டேன்..
.
ம்ம்
.
அய்யோ... இல்லன்னா
.
நான் அவன்கிட்ட எல்லாம் ஒன்னும் இந்த விஷய்த்துக்காக அப்ரோச் பண்ணல..
..
நீங்க இப்படி அபாண்டமா பேசுனா
.
(ரோஹினி குரல் தழுதழுக்க ஆரம்பித்தது)
.
இல்லவே இல்ல; சொன்னா நம்புங்கோன்னா..
.
அதெல்லாம் அப்போ காலேஜ் படிக்கும்போது எதோ வெளையாட்டா கசின் எல்லாம் கிண்டல் பண்ணுவா.. அவ்ளொதான்...
.
(சற்று கோபமான குரலில்...)
.
ஆம... நான் அப்படிப்பட்டவ தான்..
.
நீங்க என்னவும் பண்ணிக்கோங்கோ..
.
I டோண்ட் கேர்.
.
என்ன பண்ணணுமோ பண்ணுங்கோ
.
ஜஸ்ட் ஸ்டாப் திஸ் நாஸ்டி டாக்.
.. யூ ...
.

(அலைபேசி அழைப்பை துண்டித்து, தலையில் முஷ்டியை மடக்கி நெற்றியில் மெதுவாக தட்டிக்கொள்கின்றாள்; மீண்டும் ஒலிக்கும் அலைபேசி அழைப்பை துண்டித்து அமைதியாக கைகட்டி உட்காருகின்றாள்; பின் சாப்பிட்டு முடித்து எழுந்து ஹாலுக்கு செல்கின்றாள்)

(சாப்பிட்டு கொண்டிருக்கும் கமலா..'இதெல்லாம் என்ன' என்பது போல.. மீனாட்சியை கண்களால் வினவுகின்றாள்; அவளோ.. 'இதெல்லாம்
ஒன்றுமில்லை' என்பது போல புன்னைகின்றாள்)

தொடர்ந்து ஒலிக்கும் மெசேஜ் ஒலியை மட்டும் கேட்க முடிகின்றது;
 
ரோஹினி: கமலா
 
கமலா: மேடம்..
 
 
ரோஹினி: நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன். நீ என்ன பண்ண போற.

கமலா: மேடம் இப்போ ஃபை ஒர்க் எதுவும் இல்ல;நேத்தே லீவ் கேட்டிருந்தேன் மேடம்... நான் வீட்டுக்கு போலாமான்னு..

ரோஹினி: நத்திங்க் டூயிங்.

(சற்றே யோசித்து விட்டு..)

ஓகே.  அரவுண்ட் த்ரீ ஓ க்ளாக் ப்ளவுஸ் கிடைக்கும்னு சொன்னாங்க தானே காலைல கால் பண்ணும்போது... நான் எப்பவுமே என்னோட ட்ரெஸ் தைக்கற இடம் தெரியுல்ல;

கமலா: எஸ் மேடம்

ரோஹினி: அங்கே போய் என்னோட ப்ளவுஸ் ரெண்டு கொடுத்திருக்கேன். அத வாங்கிட்டு வந்து என்கிட்ட கொடுத்துட்டு போய்டு..

கமலா: ஓகே மேடம்.

ரோஹினி: கால் பண்ணி பாத்துட்டு போ..

(ரோஹினி படிகளில் ஏறி செல்கின்றாள்;)

--------------------------------------------------------------



(கமலா சோகமாக மீண்டும் டைனிங்க் ஹாலுக்கு வருகின்றாள்; சாப்பிட்டு கொண்டிருந்த தட்டில் மீதமுள்ள சாதத்தை பிசைந்து கொண்டே யோசித்து கொண்டிருக்கின்றாள்;)

மீனாட்சி: இந்தாங்கக்கா உங்க ஃபோன்.

கமலா: என்ன பொழப்பு மீனாட்சி இது; உருப்படியா ஒரு வேலையும் இல்ல; ஆனா, கூடவே வீட்டுக்கு கூட்டிட்டு வந்து ஒக்கார வச்சிருக்காங்க;

மீ: ஏன்?

கமலா:(ஹாலை நோக்கியபடியே) இன்னைக்கு முக்கியமான ஃபைல் சைன் ஆயிருக்கு; இன்னொரு ஸ்கூல் ஆரம்பிக்கறது அப்ரூவல்; ஆனா, எல்லா ரிக்வயர்மெண்ட்ஸும் ஃபுல்ஃபில் ஆகல; கொஞ்சம் தில்லு முல்லோடதான்; உடனடியா ஸ்டாஃப் மூலமா வெளியில விஷயம் தெரியக்கூடாதுன்னு...

மீ: (படிக்கட்டு பக்கம் பார்த்தபடி) ம்ம்ம்

 கமலா: நான் எங்க எல்லார்கிட்டயும் சொல்லிடுவேனோன்னு... இங்க கூட்டிட்டு வந்து ஒக்கார வச்சிருக்காங்க; இல்லைன்னா என்ன அப்போவே ஸ்கூலுக்கு அனுப்பி... ஒரு  மூட்டை வேலைய என் தலையில கட்டி அனுப்பி வச்சிருப்பாங்களே...
ம்ம்: அதானா.. சங்கதி...

 (கமலா சாப்பிட்டு முடித்தாள்)

கமலா: (சுற்றும் முற்றும் பார்த்து) இவங்க தூங்கனுன்னா கூட எந்நேரமும் வீட்டுக்கு வர முடியுது; ஆனா, என்னால.. பாரு.. வேலையே இல்லைன்னாலும் வீட்டு போக முடியல... இரு ஒரு ஃபோன் பண்ணிடறேன்.

 (மீனாட்சி சமையலறைக்குள் பாத்திரங்களை எடுத்து வைக்கின்றாள்)

கமலா:(அலைபேசியில்)
சிவா டெய்லரிங்கா?
..
ஆமா
..
3 ஓ க்ளாக் சொனீங்க
..
சரிங்க
..
தாங்க்ஸ்.
.
(பெருமூச்சு விட்டபடி) கஷ்டம்...

மீ: இப்போ என்னாச்சு;

கமலா: ஒன்னுமில்ல; காலைல நான் கேட்டப்பவே ஹோம் டெலிவரி பண்ணிடுவோம்னு சொன்னாங்க; அதுக்கு இப்போ ஆள் அனுப்பிட்டாங்களாம்; அதனால நான் போக வேண்டாம்.
மீ: அக்கா கிட்ட இதபத்தி சொல்ல வேண்டியதுதானே..
(மீனாட்சி ஒரு தட்டை எடுத்து தனக்கு சாதம், குழம்பு, பொரியல் எடுத்து சமையலறை சுவற்றில் சாய்ந்தாஅறு சாப்பிட ஆரம்பிக்கின்றாள்)

கமலா: எதுக்கு? எப்படியும் என்னை அவங்க அனுப்பறதா இல்ல; என்ன சொல்லி என்ன பிரயோஜனம்? சரி விடு. அவருக்கு ரெண்டு வாரம்தான் லீவ். இப்போவே ஒரு வாரம் முடிஞ்சி போச்சு; பிள்ளைங்க ரெண்டும் அவர அட்டையா ஒட்டிட்டு இருக்குங்க; ஸ்கூல் கூட்டிட்டு போறது; வர்றது; கடைக்கு போறது; மொட்ட மாடியில வெளையாடறதுனு; பாக்கவே சந்தோஷமா இருக்கு; பக்கத்துல இருந்து பாக்க இன்னும் இன்னும் ஆசையா இருக்கு;
கொடுத்து வைக்க மாட்டேங்குது;

மீ: (சாப்பிட்ட படியே)ம்ம்ம்

 கமலா: கல்யாணம் ஆன ஒடனே என்னை பி.எட் படிக்க வச்சாரு; கடன் வாங்கி தான்; இந்த ஸ்கூல்ல டீச்சரா சேர்ந்தேன்; மொத புள்ள பொறந்தான்; இவரு வேலை செஞ்சிட்டு இருந்த கம்பெனிய மூடிட்டாங்க; நானும் 3வது மாசமே ஸ்கூல்ல திரும்ப வேலைக்கு போயிட்டேன்; இவரு மஸ்கட் போயிட்டாரு; அப்புறம் ரெண்டாது பொண்ணு; 6 வருஷம் ஆச்சு அவரு மொத மொத வெளிநாடு போய்; வருஷம் ஒரு தடவ வருவாரு;

மீ:ம்ம்ம்

 கமலா: என் புள்ளைங்களுக்கு நான் ஒரு அம்மான்னா, என் மாமியாரு இன்னொரு அம்மா; ஆனா, பிள்ளைங்க ரெண்டும் ஒரு கட்டத்துல அவங்கள 'அம்மா'னு கூப்பிட ஆரம்பிச்சுது; சட்டுன்னு நிறுத்திட்டாங்களே.. 'என்ன பாட்டின்னுதான் கூப்பிடனும்னு'; எப்டியோ ஆயிடுச்சு; அவங்களுக்கு நான் துணை; எனக்கு அவங்க துணை; ஆரம்பத்துல, அவங்க என்மேல இவ்ளோ கரிசனம் காடினது இல்ல; என்ன பிடிக்கலையோன்னு கூட நெனச்சிருக்கேன்; அப்போ அதெல்லாம் புரியாத சின்ன வயசு எனக்கு; ஹ்ம்ம்ம்

 மீ : கொடுத்து வச்சவங்க தான் நீங்க;

கமலா:(ஏக்கமாக முகத்தை வைத்தபடி) என்ன சொல்லு மீனாட்சி, எவ்ளோதான் பிள்ளைங்க வருஷம் பூர பிரிஞ்சிருக்குற அப்பாகிட்ட வெளையாடுறத பாக்க சந்தோஷமா இருந்தாலும்.. நானும் அவரும் மட்டும் ஒரு மணி நேரமாவது விட்டில இல்லைன்னா வெளியில போயிட்டு வரனும்னு ஆசையா இருக்கு; இன்னைக்கு காலையில  வேல முடிஞ்சவுடனேயே... மேடம்கிட்ட ஹால்ஃப் டே லீவ் கேட்டேன்; ப்ம்ச்ச்... விடல..

மீ: ஹா ஹா ஹா. இவ்ளொ தானா விஷயம்; நீங்க வேணா.. புள்ளைங்க எல்லாம் தூங்கிட்ட ஒடனே, அவர கூட்டிட்டு மொட்ட மாடிக்கு போங்க; 'க்ரீடம்' த்ரிஷா மாதிரி;

கமலா: அட.. அப்படி பண்லாம் இல்ல; ஹா ஹா

 மீ:அப்புறம் என்ன; இன்னைக்கு பௌர்ணமி வேற... தேனிலவு கொண்டாடுங்க;

கமலா: ஹா ஹா ஹா

 மீ:  யப்பா சிரிச்சிட்டீங்களா?
 
கமலா: அய்யோ.. மறந்தே போச்சு; உன் பையன் எப்படி இருக்கான்? சொல்லு?

மீ: அக்கா, இன்னைக்கு டாக்டரு லீவாம். அந்த நர்சு தான் பத்து கட்டு போட்டு கொஞ்சம் மருந்தும் கொடுத்து அனுப்பியிருக்காங்க; நாளைக்கு டாக்டருகிட்ட காட்ட வர சொல்லியிருக்காங்க;  வாந்தி எடுத்தா மட்டும் ஒடனே பக்கத்துல் இருக்கற எதாவது டாக்டருகிட்ட காமிக்க சொல்லியிருக்காங்க.

கமலா: ம்ம்

 மீ: தூங்கி எழுதானாம். ஒரே ஜீரமாம்... அவன் பாட்டுக்கு பால்வாடி போயிட்டு இருந்த புள்ள. தன்கச்சி கூட்டிட்டு போய்டு, கூட்டிட்டு வருவா... அவ ஒத்தாசை இல்லாம.. நான் இவன வளத்திருக்கவே முடியாது... அன்னைக்கு நான் இங்க வந்து வேலையெல்லாம் முடிசு...பிரசவ வலி வந்தப்போ... இவதான் இவதான் ஓடோடி வந்து என்னை கூட்டிட்டு போய் ஆஸ்பத்திரியில சேத்தவ...

கமலா:ம்ம்ம்

 மீ:புள்ள பெத்து ஒரு மாசம் தான் இருக்கும்; அக்கா அவங்க அம்மா வீட்டுக்கு வந்தப்ப, என்னைய அவங்க பாக்கனும்னு எ அம்மாகிட்ட சொல்லிவிட்டாங்க. போய் பாத்தேன் கைல புள்ளையோட. அவனுக்கு ரோஹன்னு பேரு வச்சதே அக்கா தான்... நெசமா.. அவங்க ராசி, நட்சத்திர்மாம்.

கமலா: ம்ம்ம்

 மீ: அவங்களுக்கு புதுசா வந்த பொண்ணு சேட் ஆகலையாம். 'நாளைக்கே வந்துரேன் மீனா' நு சொன்னாங்க... நான் ஒரு வாரம் டைம் கேட்டு... என் தங்கைக்கு பால் கலக்கி கொடுக்க கத்து கொடுத்து... அன்னைல இருந்து அவ தான் பாத்துக்குறா..

கமலா: பால் பவுடர் விலை உனக்கு கட்டுபடி ஆச்சா..

மீ: அது எப்புடி. ஒரு டப்பாவ தெறந்தா ஒரு வாரத்துல காலி ஆயிச்சே... அக்கா தான் 2 மாசம் டப்பா வாங்கி கொடுத்தாங்க.. அப்புரம் இந்த பாலே குடிக்க பழக்கிட்டோம்; அக்கா... எனக்கு 500 ரூவா சம்பளத்துள ஏத்தி கொடுத்தாங்க... தெரியுமா...

கமலா : (வாசல்பக்கம் பாத்து) அவங்களுக்கு காரிய்ம் நடக்கனும்..

மீ: அப்படி சொல்லாதீங்க அக்க... அவங்க புள்ள போட்ட சட்டை, அவனோட பழைய பொம்மை எல்லாம் ரோஹனுக்கு தான்.

கமலா: (மெல்லிய, கண்டிப்பான குரலில்) நீ யோசிக்கவே மாட்டியா மீனாட்சி; காலைல உன் பையனுக்கு அடிபட்டுடுச்சின்னு நீ சொன்னப்போ.. அவங்க கண்டுக்கவே இல்லையே..

மீ: அது...

கமலா: அது?

மீ: அது... அக்கா அப்படித்தான். எப்பவும் . அவங்க மூடு பொருத்து. அவங்க சந்தோஷமா இருந்தா... நம்ம கிட்டயும் அன்பா இருப்பாங்க.. நீங்க வேணா பாருங்க.. என்கிட்ட நாளைக்குள்ளார என் பையன் பத்தி விசாரிப்பாங்க...

 (கமலா எதோ சொல்ல வாயெடுக்க, வாசலில் வாச் மேன் குரல் கேட்கின்றது)

 'ஹோம் டெலிவரி மேடம்; இதொ பில்'

-------------------------------------------------

மூன்று பெண்கள் ( பகுதி - 3)



(துணிகளை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு கமலா டைனின் ஹால் வந்தாள் )

கமலா: வா மினாட்சி, அங்கே போய் பேசலாம்.

(மீனாட்சி குடித்துமுடித்த காபி டம்ளரை வைத்துவிட்டு வருகின்றாள்)

கமலா: நான் வருவேன்; எதோ கொஞ்சம் பாப்போம் சிரிப்போம்னு இருந்தோம்; இன்னைக்கு எவ்ளோ விஷயம் பேசிட்டோம் இல்லையா..

மீனாட்சி: ஹா ஹா... ஆமாங்கா..

(கமலா கைகட்டியபடி சலவை கல்லில் சாய்ந்து அங்கிருக்கும் மரத்த பார்த்தபடி யோசிக்க ஆரம்பிக்கின்றாள்)

மீ: என்னக்கா... என்னாச்சு...எங்கேயோ பாத்துட்டு நிக்கறீங்க..

கமலா: மீனட்சி.. உன்கிட்ட இதெல்லாம் பேசலாமா வேணாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்.

மீ: எனக்கா புதுசா..

கமலா: சரி சொல்லு, உன்னோட புருஷன் என்ன வேலை செய்யறாரு; எவ்ளோ சம்பளம்; உன்னோடது எவ்லோ; இதெல்லாம் சொகமா வாழ்க்கைய ஓட்ட போதுமான்னு நீ யோசிச்சிருக்கிய, மீனாட்சி...

மீ: சொகமாவா... சோறு இல்லாம கூட செல நாள் வாழ்க்க ஓடும்க்கா..

கமலா: ஏனு யோசிச்சியா?

மீ: ஏனா..
ஏன்னு தெரிலேயேகா..
நாங்கல்லாம் படிக்கல இல்ல..

கமலா: படிகல... சரி... ஆனா ஒழைக்காம இருக்கீங்களா?

மீ: ஆங்.. அது எப்படி.. ஒழைக்காம... என் மாமன் அவரு ஊர்ல இருந்து வந்த காலத்துல இருந்து இந்த ஊருல ஒன்னு மாத்தி ஒன்னு ஒழைச்சிட்டு தான் இருக்காரு;

கம்லா: வேறென சொல்லு..

மீ: ஆங். இந்த குடி பழக்கம்.

கமலா: உன் புருஷன் குடிப்பாரா?

மீ: அய்யோ.. இல்லக்கா; நான் அவர மொத பாத்த்ப்போ எல்லாம் அவரு ரொம்ப அமைதி; அப்புரம் வேலையில சேந்து.. அங்க இருக்கவனுங்க எல்லாம் கூட்டிட்டு போய் குடிக்க வச்சு..

கமலா: ஏன்?

மீ: பாவங்கா... அவங்கெல்லாம். நம்மள மாதிரி வேலை இல்ல; ஒடம்பு வலி பொறுக்காம தூங்க முடியாஅ அரல்றத விட.. அந்த கருமத்த குடிச்சு வந்து படுத்தா தான் தூக்கமே வருது..

கமலா :ம்ம்ம்

மீ: அப்டி குடிக்க ஆரம்பிச்சு, அப்புரம் காசு இல்லைன்னா என் அம்மா கிட்ட தகராறு பண்றதுன்னு .. அப்டியே போச்சு; என்னை கல்யானம் பண்ணி கொடுத்தாலாச்சும் நல்லா இருப்பாருன்னு கட்டி கொடுத்தாங்க;

கமலா: பாத்தியா,,,

மீ: கல்யாணத்துக்கும் குடிக்கும் ந்ன சம்பந்தம்; வேல பாக்கும்போது ஒருநாள் கால் நொறுக்கிடுச்சு; ஆஸ்பத்திரி எல்லாம் போய்... வந்து.. அப்போதான் இந்த யூனியன் ஆளுங்க வன்டாங்க பெசினாங்க..


-----------------------------------------------------------

கமலா: யூனியன் ஆளுங்களா?

மீ: ம்ம்.. ஆமாங்கா.. ஆனா.. எனக்கு அப்போ அதெல்லாம் ஒன்னும் புரியல; ஆனா... அதுக்கப்புறம் கொஞ்சம் பேரு வந்தாங்க.. தோழர்னு.. மொதல்ல வந்தவங்களுக்கும் இவங்களுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருந்துச்சு;

கமலா: ..

மீ: அதுக்கப்புறம் என்னமா மாறிட்டாரு தெரியுமா.. சுத்தமா இருக்கறது; பேப்பர் படிக்கறது; குடிக்காம இருக்கறதுன்னு நிறைய மாறிட்டாரு; அப்போத்துல இருந்து மாமா குடிக்கறதே இல்ல; அப்பப்போ எதோ ஆர்பாட்டம்னு போயிருவாரு; கொஞ்ச நாள் முன்ன.. ஜெயிலுக்கு கூட போயிட்டு வந்தாரு..

கமலா: ஜெயிலா.. அய்யோ

 மீ: அட ஆமாங்கா.. நானும் கூட அப்படித்தான் பரிதவிச்சேன். ஆனா, மாமா பாருங்க.. படு ஜோரா வந்தாரு திரும்ப.. ஒரே பாட்டுதான்.. விசில் தான் .. மொகமெல்லாம் ஒரே சந்தோஷம்.

கமலா: ஏனாம்?

மீ: ஹா ஹா ஹா.. தெரியலக்கா..
அதெல்லாம் ஒக்காந்து பேச எங்களுக்கு ஏது நேரம்..

கமலா: கிட்டதட்ட இதே மாதிரி விஷயம் தான் நானும் பேச வந்தேன் மீனாட்சி.

மீ: ம்ம்

 கமலா: 6 மாசம் முன்னாடி..நான் பஸ்ல வந்துட்டு இருந்தேன்; மேடம் என்னை ஸ்கூல்ல இருந்து ஒரு ஃபைல் எடுத்துட்டு ஒரு இடத்துக்கு அவசரமா வர சொன்னாங்க;

மீ: ம்ம்

 கமலா: பஸ்ல இஞ்சின் பக்கம் இருக்குமே பெரிய சீட்டு அதுல போய் ஒக்காந்துட்டேன் வசதியா..
தாஸ பிரகாஷ் ஹோட்டல் பக்கம் வரப்போ...எங்க பஸ் முன்னாடி.. அது எதோ மறியல்; நிறைய பொம்பளைங்க இருந்தாங்க.. அவங்கள சுத்தி ரெட் ஷர்ட் போட்டுட்டு நெறைய ஆம்பிளைங்க.

மீ: ம்ம்ம்

 கமலா: நான் இதுக்கு முன்னாடியும் ஆர்பாட்டம் , மறியல் எல்லாம் பாத்திருக்கேன்; ஆனா.. அன்னைக்கு.. ஒஉ மணி நேரம். ரோடு ஃபுல் ப்ளாக்; அந்த பொம்பளைங்க எல்லாம் அப்படியே ரோட்டு ஒக்காந்துட்டாங்க; போலீஸ் வந்து டிரைவர்கிட்ட... 'அவங்க எந்திரிக்கறது மாதிரி தெரில; நீங்க பஸ் எடுங்க; பாப்போம்;'

மீ: அய்யோ

 கமலா: டிரைவர் வண்டி ஸ்டார்ட் பண்ணிட்டாரு; ஒரு பொம்பள அவங்க கைல வச்சிருந்த கைக்கொழந்தைய பஸ்முன்னாடி போட்டு; 'முடிஞ்சா ஏத்துய்யா பாப்போம்' நு சொல்லி வெறியோட நின்னாங்க;

மீ: கைகொழந்தையையா?

கமலா: அந்த கொழந்த ஒருபக்கம் அழுக; இன்னொரு அம்மா டிரைவர்கிட்ட வந்து, ' ஏய்யா... நாங்க என்ன எங்க புள்ளைங்க படிப்புக்காக மட்டுமா போராடறோம்; உன் வீட்டு புள்ள படிப்பும் சேத்து தானய்யா போராடறோம்; ஏன்.. நீயெல்லாம் பீஸு கட்டல;' நு கத்தி சொன்னாங்க; பஸ் முழுக்க அமைதி; டிரைவர் அத்தோட வண்டிய ஆஃப் பண்ணிட்டு கைகட்டி ஒக்காந்துட்டாரு;

மீ: யப்பா.. எவ்ளோ தைரியம்;

கமலா:எனக்கு அப்போ தான் புதுசா ஒரச்சிச்சு மீனாட்சி; நாமெல்லாம் எவ்லோ சூடு, சுரண இல்லாம இருக்கோம்னு; நானும் என் பிள்ளைங்க பீஸுக்காகத்தானே இந்த பொழப்புக்கு வந்துருக்கேன்;
என் புருஷன் வெளிநாட்டுக்கு கெளம்பும்போதெல்லாம் சொல்வாரு; 'வேலைக்கு போற பொம்பளைக்கும் கிட்டதட்ட ஆம்பளையோட தரியம்தான்; ஒவ்வொன்னையும் சமாளிக்கனும்; அது உனக்கு நிறைய கத்துக்கொடுக்கும்'; எப்போ என்ன கத்துகிட்டேனோ இல்லையோ.. அன்னைக்கு சூடு சுரணையோட வாழ்னும்னு கத்துகிட்டேன்;இன்னைக்கு என்னால அப்படி வாழ முடில்லன்னாலும்... நாளைக்கு என்புள்ளைங்க தன்மானத்தோட வாழனும்னு தெரிஞ்சிகிட்டேன்; அதுக்கு போராடனும்னு கத்துகிட்டேன்;

மீ: போராட்டமா?

கமலா: ஆமா.. மீனாட்சி. நமக்காக இல்ல; நம்ம புள்ளைங்களுக்காக நாம போராடியே ஆகனும்;

மீ: ம்ம்

 கமலா: அதுக்கப்புறம்.. அது ஒரு கம்யூனிச அமிப்போட மகளிர் முன்னணின்னு தெரிஞ்சிகிட்டேன்; அவங்க் நோட்டீஸ் எங்க கெடச்சாலும் வாங்கி படிப்பேன்; அவங்க விக்கிர புக்கெலாம் எப்பவும் வாங்கி படிக்க ஆரம்பிச்சேன்;

 (ரோஹினி படியில் இறங்கி வரும் சத்தம் கேட்கின்றது)
 
ரோஹினி: (அலைபேசியில்) சரி விடுங்கோ...
..
சரி மன்னிச்சாச்சு
..
ஹா ஹா ஹா..
..
 சொன்னதெல்லாம் வாங்கிடரேன்னு சொல்லிட்டீங்களே..
.. ஆமா.. இப்போதான்
படுத்தேன்.. நீங்கதான் எழுப்பிட்டீங்களே.
சரி.. பை..டேக் கேர்.

 (கமலா ஹாலுக்கு வந்து, ப்ளவுஸ் கவர் எடுத்த் ரோஹினியிடம் கொடுக்கின்றாள்)

ரோஹினி: சரி.. நீ கெளம்பு, கமலா..

கமலா: சரி மேடம்.

 (கமலா தன் கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்புகின்றாள்; கண்களால் மீனாட்சியிடம் விடை பெறுகின்றாள்)

மீனாட்சி: (ரோஹினியிடம்) அக்கா..

ரோஹினி: சொல்லு.. நல்லா டிசைன் பண்ணியிருக்காங்க இல்ல;

மீ: ங்ங்.. ஆமாங்கா.. அக்கா.. ரோஹனுக்கு..

ரோஹினி: ஆமாமா.. காலைல சொன்ன இல்ல; தலைல அடிபட்டுடுச்சுன்னு; நல்லா பாத்துக்கோ மீன.. தலைல அடின்னா கவனமா இருக்கனும்;

மீ: அதான்கா இன்னைக்கு 4 மணிக்கு கெளம்பட்டுமான்னு..

ரோஹினி: அதுக்கென்ன கெளம்பு..

மீ:(புன்சிரிப்புடன்) தாங்க்ஸுக்கா..

 (ரோஹினி படியேறி செல்கின்றாள்)

----------------

கடிகாரத்தில் மணி நான்கு
 
(மீனாட்சி சமையலறையில் கழுவிய பாத்திரங்களை ஒழுங்கு படுத்தி கொண்டிருந்தாள்; பெரியவர் ஒருவர் வருகின்றார்)
 
பெரியவர்: என்னம்மா.. வேலையெல்லாம் ஆச்சா?
 
மீ: வந்துடீங்களா.. தாத்தா.. பொடலங்கா கூட்டு ரொம்ப சூப்பர்;
 
பெரியவர்: நன்றிம்மா.
 
மீ: இன்னொரு விஷயம். இன்னைக்கு ராத்திரி சமையல் இருக்காது;
 
பெரியவர்: எல்லாரும் வெளிய சாப்பாடா..
 
மீ: அவங்களே சொல்லட்டும் தாத்தா... நான் ஒன்னு சொல்லி அவங்க ஒன்னு சொன்னா நல்லாருக்காது;
 
பெரியவர்: அதுவும் சரிதான்..
 
மீ: தாத்தா..
 
பெரியவர்: என்ன மீனாட்சி.
 
மீ: நீங்க எப்போ வருவீங்கன்னு காத்துட்டு இருந்தேன்..
 
பெரியவர்: என்னமா பணம் எதாவது தேவப்படுதா?
 
மீ: ம்ம்ம்...
 
பெரியவர்: நல்ல பொண்ணும்மா நீ... இழுத்து என்னைக்கு கேடு முடிச்சி நான் என்னைக்கு கொடுக்கறது;
 
மீ: ம்ம்ம்ம் ஒரு 200 ரூவா..
 
பெரியவர்: (சட்டை பாக்கேட்டில் இருந்து எடுத்து கொடுத்து)இந்தாமா..
 
மீ: பையனுக்கு தலையில அடிபட்டுடுச்சு..
 
பெரியவர்: பாத்துமா.. தலையில போய்..
 
மீ: அதான் தாத்தா.. ஒரே ஜொரமா இருக்கனாம்.. அதான் நல்லா சாப்பாடா பொங்கி கொடுக்க.. அவன் தெம்பா எழுந்து நடக்க..
 
(ரோஹினி வருகின்றாள்)
 
ரோஹினி: (பெரியவரை பார்த்து ) ஆங்.. வந்துட்டீங்களா.. இன்னைக்கு பெரிசா ஒன்னும் சமையல் இல்ல; சாதம் மட்டும் அரை அழாக்கு வச்சுடுங்கோ; பையனுக்கு ஒரே ஜொரமாம்; எப்டியும் ப்ரெட் தான் சாப்புடுவான்; எதுக்கும் இருக்கட்டும்..
 
பெரியவர்: சரிங்க..
 
(சமையலறைக்குள் செல்கின்றார்)
 
ரோஹினி: மீனா... பாவம்.. அவனுக்கு ஏக ஜொரத்துல 'இப்போவே வீட்டுக்கு போனாத்தான் ஆச்சுன்னு'.. தொல்லை பண்ணி..கார்ல வந்துட்டு இருக்கான்;
கொஞ்சம் பாத்துக்கோ; நீயும் இல்லாம.. எப்டி..
 
மீ: அக்கா..
 
ரோஹினி: பாத்துக்கோ மீனா.. கார் ரிப்பேராம்; கோயில் கிட்டயே; அத்தையும், பாப்பம்மாவும் வர்ற நாழி ஆகுமாம்; இந்த ஃபங்க்ஷன் கூட வரமுடியாம போச்சு அவங்களுக்கு; பாத்துக்கோ மீனா..
மீ: அக்கா.. நாளைக்கு அவன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனும்; நாளைக்கு.. கொஞ்சம் லேட்டா..
 
ரோஹினி: அதுக்கென்ன மீன; பாப்பம்மா பாத்துப்பார் அவன... கெளம்பறேன்; 7 ஓ க்ளாக் அவால்லாம் வந்துருவா.. சரியா. அதுவரைக்கும் இருந்துக்கோ;
 
(ரோஹினி வெளியேறுகின்றாள்; கார் வரும் சத்தம் கேட்கின்றது; தன் மகனிடம் 'மீன இருப்பா.. சரியா.. அவளோட வெளையாடிட்டு இரு; பாப்பம்மாவும் பாட்டியும் சீக்கிரம் வந்துருவா.. சரியா.. சமத்தா இரு; பை;')


-----------------------------------------------------------------------
க்ளைமாக்ஸ் காட்சி

இடம்: மீனாட்சி வீட்டு தெரு
நேரம்: இரவு 8 மணி


(ஓட்டமும் நடையுமாய் மீனாட்சி வருகின்றாள்)

இட்லிக்காரம்மா: என்ன மீனாட்சி; புள்ளை அடிபட்டு கெடக்கறான்; இம்புட்டு நேரங்கழிச்சு வர்றியே;

மீ: இல்லக்கா.. அவங்க புள்ளைக்கு ஜொரமுன்னு..

 (மீனாட்சி நகர்கின்றாள்)

இட்லிக்காரம்மா: சீ, என்ன ஜன்மங்களோ; இதுங்கள எல்லாம் ஒஉ சுனாமி வந்து தூக்கிட்டு போகாம..
ஒருவர்: சுனாமி கூட அவங்கள சீண்டாதும்மா.. நம்மளதான் அள்ளி விழுங்கிடும்..

-----------------

(மீனாட்சி வீட்டிற்குள் நுழைகின்றாள்; தங்கை மடியில் தூங்கி விட்ட மகனை பார்க்க பொருமுகின்றாள்)

தங்கை: என்னக்கா.. லீவு கேட்டுட்டு காலையிலேயே வர்றேன்னு சொன்ன.. அப்போறம்.. போனு பண்ணி மதியம் வற்றென்னு சொன்ன.. இப்போ வந்து நிக்கற..

மீ:(அழுதபடி) எங்க முடியுது.. நம்ம சனத்துக்கு..என்ன சாப்பிட்டான்? குளிப்பாட்டுனியா; மருந்து கொடுத்தியா.. வாந்தி எடுக்க கூடாதுன்னு சொன்னாங்க இல்ல;

தங்கை: ஒன்னும் பிரச்சினை இல்லகா.. மாமாவோட தோழருங்க சாயந்திரம் வந்திருந்தாங்க; அதுல ஒருத்தர் இவன பாத்தாரு; 'ஒன்னும் பிரச்சினை இல்லன்னு சொன்னாரு'

மீ: மாமா எங்க?

தங்கை:  நீ அலுத்து போய் வருன்னு, உனக்காக சாப்பிட எதோ வாங்க ரோட்டு கடைக்கு போயிருக்காரு; ரொம்ப மாறிட்டாரு... இல்லக்கா..

மீ : ம்ம்ம்ம் ஆமா ஆமா..

தங்கை: சரி, பாய போடு; நான் கெளம்பறேன்; நான் உன் புள்ளைக்கு ஆயா வேல பாக்கறது.. உன் சம்பளம் முழுசும் எனக்கு கொடுக்கனுமாகும்; (சிரித்தாள்)

மீ: ஹா ஹா ஹா...  எல்லாம் உன் கலயாணம் வரத்தான.
 
தங்கை: ஹுக்குங்.. அது ஒன்னு தான் கேடு; நீங்கல்லாம் படுற பாட்ட பாத்துட்டுமா... வீட்ட வாடகைக்கு புடுச்சி, சமச்சு, துணி தொவச்சு, கவுன்மென்டு ஆஸ்பத்தியில புள்ள பெத்து, ஒவ்வொன்னுத்தும் தூக்கிட்டு ஓடி.. வுடுக்கா..
 
மீ: என்ன பண்லாமுன்னு இருக்கீங்களாம்.. கலக்டரம்மா..
 
தங்கை: செலவெல்லாம் மிச்சம்க்கா... பேசாம.. மாமனையே கட்டிட்டு.. இங்கயே ஓரமா ஒக்காந்துரலாமான்னு பாக்கறேன்... சிக்கன நாவடிக்கை;
 
மீ: அடி...
 
தங்கை: நான் எஸ்கேப்பு..
 
(மீனாட்சி சிரிக்கின்றாள்; நடந்து செல்லும் தங்கையை ஆசையோடு பார்க்கிறாள்;பின் சோகம் சூழ வீட்டிற்குள் வருகின்றாள்; கணவர் வருகின்றார்)
 
கணவர்: மீனாட்சி, இந்தா உங்க ஓனரம்மா..ஃபோன்..
 
மீ: (கையில் வாங்கி) ஹலோ..
..
மறுமுனையில்(ரோஹினி): மீனாவா?

மீ: நாந்தாங்கா..
 
மறுமுனையில்: மீனா, வீட்டுக்கு இன்னைக்கு நட் கொஞ்சம் கெஸ்ட் வந்து தங்கறா..
 
மீ: சரிக்கா..
 
மறுமுனையில்: பாப்பம்மா ஒண்டியா எல்லாறயும் சமாளிச்சிக்க மாட்டா...உனக்கே தெரியுமே..
 
மீ:ம்ம்ம்
 
மறுமுனையில்: காலைல 7 மணிக்கெல்லாம் வந்துரு மீனா.
 
மீ: ம்ம்ம்
 
மறுமுனையில்: ஹலோ.
 
மீ:ம்ம்
 
மறுமுனையில்: என்ன லைன் கட்டாயிடுச்சா... ஹலோ மீனா..
 
மீ: (கனமான குரலில்) ம்ம் சொல்லுங்க்கா..
 
மறுமுனையில்: காலைல 7 மணிக்கெல்லாம் வந்துரு மீனா
 
மீ: ம்ம்

மறுமுனையில்: இருக்கியா.. பதில் சொல்லு..
 
மீ: வந்துர்றேன்க்கா..
 
மறுமுனையில்: கண்டிப்பா... ஒகே அப்புரம் பேசலாம்
 
மீ: ம்ம்..
 
(மீனாட்சியின் இறுகிய முகத்தில் தாரை தாரையாக கண்ணீர்; கமலாவின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கின்றது 'நமக்காக இல்ல; நம்ம புள்ளைங்களுக்காக நாம போராடியே ஆகனும்.')
 
கணவர்: மீனாட்சி.. ஏன்.. என்னாச்சு..
 
(நீண்ட நேரம் அழுகைக்கு பின்)
 
மீ: இவன் வளந்து பெரியவனாகி.. இவனுக்கும் நம்மள போல பொழப்பு தான.. மாமா..
 
கணவர்: ஆமா.. மீனாட்சி.
 
மீ: இதெல்லாம் மாத்தவே முடியாதா... மாமா.
 
கணவர்: அதான் நான் சொல்றேன்ல..
 
மீ: நான் வர்றேன். மாமா.. நீங்க எந்த ஆர்ப்பாட்டம், மறியல், கூட்டம் கூப்டாலும் வர்ரேன்.
 
கணவர்: என்ன மீனாட்சி, ஒரே நாள்ல இப்டி மாறிட்ட; நான் அவ்ளோ சொல்லுவேன்..
 
மீ: ஆமா.. மாமா.. நாம போராடனும்; நாம தான் போராடனும்;  'நமக்காக இல்ல; நம்ம புள்ளைங்களுக்காக நாம போராடியே ஆகனும்.'
 
(மீனாட்சி குழந்தையை பார்க்கின்றாள்; குனிந்து அவன் கன்னங்களை தொட்டு பார்க்கிறாள்)
 
THE END

Tuesday, 18 March 2014

தற்கொலை

"தற்கொலை" என்பது தன் வாழ்வாதாரத்தை சிதைக்கின்ற தனிப்பட்ட நபருக்கோ, சொந்தங்களுக்கோ, சமூகத்திற்கோ எதிராக ஒரு தனிநபரால் கொடுக்கப்படும் தண்டனை; காட்டப்படும் கோபம்; கவன ஈர்ப்பு தீர்மானம்;

Saturday, 15 February 2014

'காதலி' ஜென்னி மார்க்ஸ்

கார்ல், நீ என்னை வெகு வினோதமாக, வெகு மென்மையாய்க பார்க்கிறாய். நீ என்னிடம் கேட்பது போலவும், அல்லது என்னிடம் கூறுவது போலவும், அடிக்கடி பல விஷயங்கள் எனக்குத் தோன்றுகின்றன. அதன்பின் நான் விவரிக்க முடியத அற்புதமான உணர்ச்சிப் பெருக்கினால் இழுத்துச் செல்லப் படுகிறேன்.
- ஜென்னி மார்க்ஸ்

# இத்தனைக் காதலுக்கும் சொந்தக்காரராக நெடுங்காலம் ஒரு சமூக போராளியாகத் தான் இருக்க முடியும் #

இந்த பூக்கள் விற்பனைக்கல்ல - வைரமுத்து

20 ஆம் நூற்றாண்டின் கவிதை ரசிகர்கள் வைரமுத்துவை புறக்கணித்திருக்க முடியாது;
மெஹந்தி டிசைன் புத்தகம் தேடப் போய்.. பள்ளிப்பருவத்திலோ, கல்லூரி நாட்களிலோ படித்த இந்த கவிதை புத்தகம்...இன்று கண்களில் பட்டது;
அந்த கால்கட்டத்தின் என்னுடைய சிந்தனை, ரசனை, அறியாமை, வேகம், விவேகம், இளமை எல்லாம் கண்முன் விரிந்தது; இதுதான் கலையின் தாக்கம்.. படித்த புத்தகமோ, ரசித்த இசையோ, உணர்ந்த அந்த காலத்திற்கு இட்டுச் செல்கின்றது.

படித்த கவிதைகளில் பிடித்த வரிகளை அடிக்கோடிட்டிருந்தேன். அவற்றுள் சில என்னுடைய இந்த சூழலுக்கும் மாறாமல் இருந்த கருத்துக்களை கண்டுகொண்டேன்...
உங்களோடும் பகிர்கின்றேன்...

******

அறிவாளியாய் இரு;
முட்டாளாய் நடி;

*****

மூன்று வேளை...
என்னும் தேசிய கீதத்தை
இரண்டே வார்த்தையில் பாடி முடிப்பீர்கள்;
போதாது டாக்டர்.
எங்கள் தேவை
இது இல்லை டாக்டர்.
நோயாளி பாமரன்
சொல்லி கொடுங்கள்.
நோயாளி மாணவன்
கற்ருக் கொடுங்கள்.

*****

ஒருவனுக்கு ஒருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை

*****

கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம்...
எதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை ஏசுகிறது
"சீ! மனிதனே!"

*****

ஒரு நல்ல புத்தகம்
திறந்து கொண்டால்
நரகத்தின் வாசல் மூடப்படும்

*****

வாக்குச்சாவடிக்கு
வரச் சொன்னீர்களே
கைநாட்டேனும்
கையொப்பமானதா?
யோசிக்கத்தான்
வைக்கவில்லை
வாசிக்கவேனும் வைத்தீர்களா?

*****

வாக்குச் சாவடிக்கு
வாகனம் இரண்டு
வாக்களிக்கும்வரை
பல்லக்கு
வாக்களித்தபின்
பாடை

****

முக்கால் பவுனுக்கே
முந்நூறு குறையுதடி.

இந்த லட்சனத்தில்
ஏண்டியம்மா குத்தவச்ச..

*****

நன்றி படுக்கையே..

என்னை
நிராகரியாதிருப்பது
நீ மட்டும்தான்

*****


நெஞ்சுக்குள் எப்போதும்
இப்போதும் எரியும்
இதெ
தீ

*****

பிணங்களுக்காகத்தான்
சுடுகாடு தயாரிக்கப்பட்டது

இங்குதான்
சுடுகாட்டுக்காகவே
பிணங்கள் தயாரிக்கப்பட்டன..

*****

"என்னை மறந்து போ
ஏனென்றால்
இன்னும் உன்னைக்
காதலிக்கின்றேன்"

என் குடும்பம்
நடுத்தர வர்க்கத்து நரகம்

உன் வலது காலை எடுத்து
நீ என் நரகத்துக்குள் வர வேண்டாம்..

*****










"ஆணாதிக்கத்தை புரிந்து கொள்ள பெண்ணை பேச விடு"

நான் படித்துக் கொண்டிருந்த டியூஷனின் ஒருநாள் ஷீபா வந்து சேர்ந்தாள். அப்போதுத் தான் அவளை முதலில் சந்தித்தேன். எப்போதாவது பேசிக்கொள்வோம். அவளுடைய வெளிப்படையான வாய் பேச்சு நட்புக்கு வழிவகுத்தது. ஒராண்டு கழித்து நான் டியூஷன் செல்வது தடைபட்டது. ஆனாலும் அவள் அடிக்கடி வீடுவந்து நட்பை தொடர்ந்தாள்.

"நானே எப்போதும் வருகின்றேன், நீயும் ஒருநாள் வீட்டு வா" என்ற அழைப்பை ஏற்று எப்போதாவது அவள் வீடு சென்றிருக்கின்றேன். வறுமை தெரியும். அவள் பாட்டி தொழுகை செய்வதை பார்த்திருக்கின்றேன். "நீ தொழுவியா?" கேட்டேன். "எப்போதாவது... பாட்டி வற்புறுத்தும்போது மட்டும்." அவள் அம்மா இஸ்லாம். அப்பா இந்து. இப்போது பாட்டி பராமரிப்பில் இஸ்லாமிய "ஷீபா". பள்ளி தோழிகள் கதை, பாட்டு பாடுவது என்று பொழுதை கழிப்போம்.



அப்போது அவள் சுதந்திரமானவள் என்று தோன்றும். ஏன், எப்படி என்று தெரியாது. எப்போதும் அவள் கோவித்து கொள்வாள். மீண்டும் சில நாள் கழித்து அவளே சமாதானம் ஆகி திரும்ப வருவாள். ஒருமுறை நான் கோவித்துக் கொண்டேன். காரணம் புரியாத அவள் கண்ணீரோடு நீண்ட கடிதம் எழுதித்தந்தாள். மறக்க முடியாதவளாகி விட்டாள். நிலப்பிரபுத்துவ வாழ்க்கைமுறையில், ஒரு பெண்ணாக உணர்வுகளை கட்டுப்படுத்தவும், முழுமையாக வெளிப்படுத்தாத மனநிலையில் நான் இருந்த போதும்.. என்னுடைய சில குணாதியங்கள், சிக்கலான தருணங்கள் அறிந்தவள் அவள் மட்டுமே.



பத்தாம் வகுப்பு. அரபு தேசத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவள் தாய், அவளுக்கு தங்க சங்கிலி, வளையல், கம்மல் வாங்கி வந்திருந்தார். அவற்றை அணிந்துகொண்டு எனக்கு காண்பிக்க வீடு வந்தாள். வெளிப்படையாக தெரிந்தது, அவள் திருமணத்திற்கு தயார் படுத்தப்படுகின்றாள்.



12 வகுப்பு. நாங்கள் வேறு வீட்டில் குடியேறினோம். அவளை சந்திக்கும் வாய்ப்பு குறைந்தது. கல்லூரி நாட்களில் ஒரு நாள் தன் "திருமண அழைப்பிதழ்" கொண்டுவந்தாள். உற்சாகம் தெரிந்தது. திருமணத்திற்கு சென்றேன். இஸ்லாமிய திருமணம் பார்ப்பது இதுவே முதல்முறை. அவள் அருகில் அமர்ந்திருந்தாலும் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. சிறிது நேரம் வெளியில் கடைப்பக்கம் நடந்து விட்டு திரும்பினேன். கழுவிய முகம் துடைத்துக் கொண்டே அவள் அழுது கொண்டிருந்தாள்.



"திருமணத்தன்று எப்படி மஞ்சள் பூசலாம்?" மாப்பிள்ளை வீட்டாரின் உறவினர் கேட்க, "அதனால் என்ன, இது எங்கள் ஊர் பழக்கம்" என்று இவர்கள் சொல்ல...சர்ச்சையானது. அவள் அழுதுகொண்டிருந்தாள். பெண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த பொருள் வேண்டுமானாலும் சர்ச்சையாகலாம். யார் வேண்டுமானாலும் சர்ச்சை செய்யலாம்.ஒருவழியாக திருமணம் முடிந்தது.எட்டி நின்று வாழ்த்து கூறி வெளியேறினேன்.



அவள் வெளிமாநிலத்திற்கு கணவனோடு சென்றாள். ஒருவருடம் கழித்து அவளுடன் தொலைப்பேசியில் பேசினேன்.. அவளுக்கு தலைபிரசவம். நான் கல்லூரி முடிக்கும் தருவாயில் அவள் சென்னைக்கு குடும்பத்தோடு திரும்பி வந்தது அறிந்தேன். அவளை பார்க்க சென்றேன். கை குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள். அருகில் அவள் ஒன்றரை வயது மகன் விளையாடிக் கொண்டிருந்தான். விளையாட்டாக சொன்னாள், "அவன் ஆறு மாச கொழந்தையா இருக்கும் போது, ஏதோ சந்தேகம்...டாக்டர் கிட்ட போய் செக் பண்ணேன்... 5 மாசம்னு சொன்னாங்க... டாக்டர் திட்னாங்க... பாவம் இவ வயித்துல இருக்கும்போது, நான் ஒரு சத்து மாத்திர கூட சாப்பிடல.. கொஞ்சம் நோஞ்சான் பிள்ளை போலதான் பொறந்திருக்கா..."



அவளுடைய பழைய உற்சாகம் காணாமல் போயிருந்தது. அவளுடைய மாமனார், மாமியார் அங்கே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருட்ந்தார்கள். உறவு பிரச்சினைகள் நிறைந்த வீடாகவே தெரிந்தது. சிறிதுநேரம் பேசிவிட்டு திரும்பினேன்.



என்னுடைய முதுகலை பட்டப்படிப்பு முடித்து நான் வேலைக்கு சென்றேன். அவள் வீடு மாறி சென்று விட்டாள். எங்கு என்று தெரியவில்லை. ஐந்து ஆண்டுகளாக அவளை பார்க்க முடியவில்லை. ஒருநாள் அதிஷ்டவசமாக வீதியில் அவள் தங்கையை சந்தித்தேன். "நான் கல்யாணம் பண்ணிட்டேன். அவங்களுக்கெல்லாம் பிடிக்கல. என் கிட்ட பேசறதில்ல. அக்கா, அவ நம்பர் தரேன்."

தொலைபேசியில் அழைத்தேன். எதிர்முனையில் அவள் சொன்ன "ஹலோ" வில் ஆரம்பித்து அவள் பேசியது கேட்க, "இது ஷீபா அல்ல; வேறு யாருடனோ பேசிக்கொண்டிருக்கின்றோம்" என்ற தோன்றியது.



சிலநாள் கழித்து என் திருமண அழைப்பிதழ் கொடுக்க அவள் வீடு சென்றேன். உருவத்திலும் பழக்கத்திலும் மாறி இருந்தாள். அவள் சிரித்து பார்க்க கொடுத்து வைக்க வில்லை. அவளுடன் பேசியதில் இது நினைவில் நின்று விட்டது. "கல்யாணம் பண்ணி மொத மூணு வருஷத்துலயே மூணு பிள்ளைங்க ஆயிடுச்சு. அம்மா என்னை டாக்டர்கிட்ட இழுத்துட்டு போய் "காப்பர் - டி" மாட்ட வச்சாங்க. அவருக்கு நான் காப்பர் - டி போட்டிருக்குற விஷயம் தெரியாது. தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆயிடும். அவருக்கு மத நம்பிக்கை ஜாஸ்தி. முஸ்லீம்ஸுல இதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க. அமாவோட பேச்சு இல்ல; தங்கையோட பேச்சு இல்ல; இந்த வீடையே சுத்தி சுத்தி வரேன். வெளியில கடைக்கு கூட போறது இல்ல; இப்போ நாலு வருஷம் மேல ஆச்சு. 'காப்பர் - டி' எடுத்தாகனும்... என்னப் பண்றதுன்னு புரியல... "





"அவருடன் பேசிப்பாரு" என்று சொன்னேன். அது வாய்ப்பில்லை என்பது போல பார்த்தாள். அங்கிருந்து கிளம்பினேன். "இரு. அவர் வர்ற நேரம். இருட்டிடுச்சு. ஆட்டோ பாத்து அனுப்புவாரு." நான் அது மறுத்து, விடைபெற்று நடந்தேன். பேருந்து நிலையம் நோக்கி, அரைமணி நேரம் நடந்தேன்... ஒரு மனிதனையும், உலகின் மாபெரும் ஒரு மதத்தையும் மனதுள் வசை பாடிய படியே.



(என் திருமணத்திற்கு அவள் வரவில்லை; ஒருநாள் அவள் தொலைப்பேசியில் அழைத்தேன். "சுவிட்ச் ஆப்" என்றது. வேறு ஊருக்கு குடிபெயர்வதாக சொல்லிக் கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. மீண்டும் முயற்சித்தேன்... பயனில்லை... இப்போது அவள் எங்கு இருக்கின்றாள் என்று தெரியவில்லை; என்றாவது சந்திப்பேன்... சந்திக்க விரும்புகின்றேன்..)