(ரஷ்ய நாவல்)
1944. சில்லிட்டு உறையப்போகும் இதயத்திற்காக, உடலை, உணர்வை தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.பனிக்கட்டிகளின் கடுங்குளிர் நிறைந்த ஜெர்மானியர் ஆக்கிரமித்த ரஷ்ய கிராமம் ஒன்றில் ஓர் இரவில் நாம் பிரவேசிக்கப் போகின்றோம்.
ஒரு மாத காலமாக புதைக்கப்படாமலும் அப்புறப்படுத்தப் படாமலும் ஆங்காங்கே கிடக்கும் பிணங்களுக்கு நடுவே நாம் நடந்து செல்கின்றோம்.
ஆம்.
ஹிட்லரின் நாஜி படைக்கு எதிராக போரிட்டு மடிந்த ரஷ்யாவின் செம்படை வீரர்களின் பிணங்கள் புதைக்க அனுமதியில்லை;
தூரத்தில் தற்காலிக சிறைக்கூடம் அருகே, "ஒலினா" 45 வயது மதிக்கத்தக்க நிறைமாத கர்ப்பிணி, அரை நிர்வாணமாய், இரண்டு ஜெர்மானிய வீரர்கள் பிந்தொடர.. விழுவதும் எழுவதும் நட்ப்பதுமாய் வேதனைப்பட்டு உளரும் வேதனை சத்தம் நம் காதில் விழுகின்றது.
அவள்.... அவளுக்கு தெரிந்த ரஷிய கொரில்லா படையினரின் இருப்பிடம் சொல்வதாக இல்லை;
"அவள் இன்னும் ஒன்றும் சொல்லவில்லை. அவளை குத்து! ஊம் குத்து.."
துப்பாக்கியின் கூர்முனை அவள் உடலில் பாய்கின்றது; நாம் அச்சத்தில் உறந்திட..
ஒலினாவின் முதுகில் இருந்து ரத்தம் வழிந்தோடுவதை பார்க்கின்றோம்.
அத்தகைய பயங்கர இரவை ஜெர்மானியரும் நாமும் கண்டதில்லை... குளிர் காற்று நம் உடலை குத்துகின்றது; ஜெர்மானியரை அச்சுறுத்தும் அந்த மரண பயம் நம்மையும் தொற்றிக்கொள்கின்றது.
அந்த இடத்தை விட்டு அகன்றுவிட துடித்து நாம் வீடுகள் நிறைந்த பகுதிகளில் நடக்கின்றோம். ஒரு தூப்பாக்கிகுண்டின் வெடிச்சத்தம் காதை கிளிக்கின்றது; சத்தம் கேட்டு வீடுகளை விட்டு வெளியில் வரும் மக்களை பார்க்க, படபடக்கும் நெஞ்சத்தோடு காத்துக் கொண்டு இருக்கின்றோம்;
ஏமாற்றம்.
அங்கே எந்த சலசலப்பும் இல்லை; கிராமத்து மக்களுக்கு பழகி விட்டது; அந்த நிசப்தம் மயான அமைதியோடு நம்மை மேலும் அச்சமுற செய்கின்றது;
"என்ன இது? எல்லோரும் உறங்கி விட்டார்களா?" நமக்குள் கேள்வி.
இல்லை. அங்கே ஒவ்வொரு வீட்டின் ஜன்னலுக்கு பின்னாலும் இருள் நிறைந்த அறையில் இருந்து ஒரு ஜோடி கண்களாவது வீதியை பார்த்துக் கொண்டுதான் இருந்தது. ஒரு வீட்டை கடக்கும்போது, தணிந்த பேச்சுக்குரல் கேட்கின்றது.
"இவனை நாம் இங்கேயே புதைக்க வேண்டும்" ஒரு தாயின் குரல்.
"நம் வீட்டிலா?" ஒரு சிறுமியின் குரல்.
"வேறு எங்கே? தன் வீட்டில் அவன் படுத்துறங்குவான்.அவனை தாழ்வாரத்தில் புதைக்கலாம்"
ஆவல் மிகுதியால் அந்த வீட்டின் ஜன்னலை விலக்கி எட்டிப்பார்க்கின்றோம். மங்கிய வெளிச்சத்தில், ஒரு மேசைமேலே சின்னஞ்சிறு சிறுவன் "மீஷ்கா" குண்டடிபட்ட ரத்தக்கறையோடு படுக்க வைக்கப்பட்டுள்ளான். சில நிமிடங்கள் முன், அவன் கடைசியாக பேசிய வார்த்தைகள்,
"ஒலினா அத்தே! உனக்கு ஒரு துண்டு ரொட்டி கொண்டு வந்திருக்கேன், இதோ"
ஜெர்மானிய காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு சாக்கடையில் எறியப்பட்ட தன் 10 வயது மூத்த மகன் மீஷ்காவின் பிணத்தை, மிக சாதுர்யமாக, தரையில் வயிற்றால் ஊர்ந்து, கஷ்டம் சகித்து, ரோந்துவரும் ஜெர்மானியருக்கும் தெரியாமல், வீட்டிற்கு கொண்டுவந்து சேர்த்தாள். அந்த தாய்க்கு தன் மகனின் சாவிற்காக அழ கூட நேரமில்லை; விரைந்து மகனின் பிணத்தை புதைக்க வேண்டும்.
நாம் நினைவில் கொள்கின்றோம்.
"ஜெர்மானியர் பிணங்களை புதைக்க அனுமதிப்பதில்லை" மீஷ்காவின் சவ அடக்கம் முடிந்தது;
"குழந்தைகளே! படுத்துக்கொள்ளுங்கள். நாம் சிறிது நேரமாவது தூங்க வேண்டும்"
கனத்த இதயத்தோடு அந்த வீட்டை கடந்து வருகின்றோம். குளிர்காற்று நம்மை மோதித் தள்ளுகின்றது. தூரத்தில் ஒரு பெரிய மரத்தில் ஒரு இளைஞனின் பிணம் கயிற்றில் தொங்கியபடி ஆடிக்கொண்டு இருக்கின்றதை பார்க்கின்றோம்.அந்த ஊரை விட்டு சீக்கிரமே வெளியேற துடிக்கின்றோம்...
பொழுது புலர்கின்றது; பகல் மாறுபட்டு இருக்கின்றது; ஒலினாவின் பிரசவம்; சிறுவனின் பிணம் பற்றிய விசாரணை; ஜெர்மானியர் உணவிற்காக தானியம் தராத கிரமத்தினர் ஒற்றுமை; இரவில் கிராம நீதிமன்றம் இரகசியமாய் செயல்பட்டு மரணத்தை தண்டனையாய் தருவது; ஆகிய நிகழ்வுகள் செம்படை வீரர்களின் வரவு வரை நீண்டாலும்...
அந்த ஒரு இரவு.. இதயம் சில்லிட்ட அந்த ஒரு இரவு.... நம் நினைவை இன்றும் சில்லிட்டு இருள்கின்றது...
No comments:
Post a Comment