Wednesday, 22 July 2015

மூன்று பெண்கள் ( பகுதி -2)

மீ: (கனிவான முகத்தோற்றத்தோடு.. கன்னத்தில் கைவைத்தபடி) ம்ம்ம்ம்

 கமலா: என்ன பாக்கற.. புதுசா பாக்கற மாதிரி...

மீ: (பெருமூச்சு விட்டபடி... ) ம்ம்ம் புதுசா பாக்கற மாதிரி தான் இருக்கு; (சற்றே உயர்ந்த குரலில்) பொறாமையா இருக்குக்கா...

கமலா: (சிரித்தபடி) எதுக்கு...

 (கமலாவின் புன்சிரிப்பு, மீனாட்சியின் சோகமான முகம் பார்த்து... மாறி மறைகின்றது)

கமலா: (பேச்சை மாற்றும் விதமாக) என்ன மீனாட்சி,பொடவையில இவ்ளொ தண்ணி சொட்டுது..

மீ: இல்ல, கரையா இருந்துது... அதான் கொஞ்சம் சோப்பு போட்டு அலசினேன்.

கமலா: நீ இந்த பேட் எல்லாம் யூஸ் பண்ண மாட்டியா?

மீ: அட... நீங்களுமா. அத்தோட... அது விக்கற விலைக்கு நாங்க ஒருநாள் சோரு தின்னுவோம். இது எம்புள்ள ரத்தக்கா... தலையில அடிபட்டுடுச்சு...

கமலா: அய்யோ.. என்னாச்சு.. இப்போ எப்படி இருக்கான்.

மீ: தெரிலக்கா.. காலையில நான் கெளம்பற நேரம்.அவன தூக்கிட்டு ஆஸ்பத்திரி எல்லாம் தனியா போக நேரமில்லை; அப்படியே.. அம்மா விட்டுக்கு போய் தங்கச்சியயும் கூட்டிட்டு.. சுகாதார மையத்துக்கு போனேன். ஒரு நர்சு கூட இல்ல.. அவ்ளோ காத்தால யாருக்கா இருப்பா...

கமலா: ம்ம்ம்

 மீ: அவங்களுக்கு ஒரு பாக்கேட்டு ரொட்டி மட்டும் வாங்கி கொடுத்துட்டு நான் இங்கே வந்துட்டேன்.

கமலா: அடிப்பாவி.. அவன் இப்போ எப்டி இருக்கான்?

மீ: அதான்கா உங்ககிட்ட இல்லைன்னா அக்காகிட்ட கேட்டு ஒரு போன் மட்டும் பேசிடலாமுன்னு யோசனையா இருந்தேன்.

கமலா: இந்தா மொதல்ல பேசு. மேடம் அப்போவே மாடிக்கு போய்ட்டாங்க; தூங்கியிருப்பாங்கன்னு நெனக்கிறேன். இல்லன்னா நாம பேசிட்டு இருக்கறது வம்பாயிடும். பாத்துட்டு வரேன்.

மீ: (மொபைலை வாங்கியபடியே) சரிக்கா
.
  ----------------------------------------


(கமலா டைனிங் ஹாலை கடந்து வரும்போது, ரோஹினி அலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டு படிக்கட்டில் இறங்கி வருவதை உணர்கின்றாள். தன் புடவையை சீராக இருக்கின்றதா என்றும் தன் முகத்தை அங்கிருந்த கண்ணாடியில் பார்த்துவிட்டு, முகத்தோற்றத்தை பணிக்கேற்ப மாற்றிக்கொண்டு ஹாலுக்குள் வருகின்றாள்.)

ரோஹினி: சரிக்கா... ஹாஸ்பிடல் கூட்டிண்டு போக்கா. அத்திம்பேர் ஹாஸ்பிடலே தான். ஒன்னும் ஆகாது....
..just fever akka..
 ரெண்டு தட வாந்தி எடுக்கறதெல்லாம் பிரச்சினையா.
.....
எனக்கு இப்போ அங்கெ வர முடியாது..
ம்ம்ம்...
ஈவ்னிங் பார்ட்டி...இவரு சொந்தக்காரர் ஃபங்க்ஷன்..
....
நான் போகலைன்னா.. ஒவ்வொன்னும் ஒவ்வொன்னு பேசும்...
 சரிக்கா.. பாத்துக்கோ...
 
(ரோஹினி டைனிங் ஹாலுக்குள் நுழைந்தாள். கமலா அவளை பின் தொடர்ந்தாள்)
 
ரோஹினி: மீனா..
 
மீ: அக்கா, இதொ வரென்க்கா.
 
ரோஹினி: சாப்பாடு மீனா...
 
மீ: இதோக்கா.
ரோஹினி: கமலா, நீயும் சாப்டிடு.
 
கமலா: சரி மேடம்.
 
ரோஹினி: மீனா, சமச்சு முடிச்சு எத்தனை மணிக்கு கெளம்பினாரு?
 
மீ: ஒரு 12 இருக்கும்க்கா..
 
(ரோஹினியின் அலைபேசி அழைப்பு வருகின்றது)
 
ரோஹினி: ஹலோ;
சொல்லுங்க. டெல்லி எல்லாம் எப்படி இருக்கு.

.
ம்ம்ம்
..
அந்த வேல கிட்ட தட்ட முடிஞ்சுடுத்து; இன்னைக்கு signனும் வாங்கிட்டேன்..
.
ம்ம்
.
அய்யோ... இல்லன்னா
.
நான் அவன்கிட்ட எல்லாம் ஒன்னும் இந்த விஷய்த்துக்காக அப்ரோச் பண்ணல..
..
நீங்க இப்படி அபாண்டமா பேசுனா
.
(ரோஹினி குரல் தழுதழுக்க ஆரம்பித்தது)
.
இல்லவே இல்ல; சொன்னா நம்புங்கோன்னா..
.
அதெல்லாம் அப்போ காலேஜ் படிக்கும்போது எதோ வெளையாட்டா கசின் எல்லாம் கிண்டல் பண்ணுவா.. அவ்ளொதான்...
.
(சற்று கோபமான குரலில்...)
.
ஆம... நான் அப்படிப்பட்டவ தான்..
.
நீங்க என்னவும் பண்ணிக்கோங்கோ..
.
I டோண்ட் கேர்.
.
என்ன பண்ணணுமோ பண்ணுங்கோ
.
ஜஸ்ட் ஸ்டாப் திஸ் நாஸ்டி டாக்.
.. யூ ...
.

(அலைபேசி அழைப்பை துண்டித்து, தலையில் முஷ்டியை மடக்கி நெற்றியில் மெதுவாக தட்டிக்கொள்கின்றாள்; மீண்டும் ஒலிக்கும் அலைபேசி அழைப்பை துண்டித்து அமைதியாக கைகட்டி உட்காருகின்றாள்; பின் சாப்பிட்டு முடித்து எழுந்து ஹாலுக்கு செல்கின்றாள்)

(சாப்பிட்டு கொண்டிருக்கும் கமலா..'இதெல்லாம் என்ன' என்பது போல.. மீனாட்சியை கண்களால் வினவுகின்றாள்; அவளோ.. 'இதெல்லாம்
ஒன்றுமில்லை' என்பது போல புன்னைகின்றாள்)

தொடர்ந்து ஒலிக்கும் மெசேஜ் ஒலியை மட்டும் கேட்க முடிகின்றது;
 
ரோஹினி: கமலா
 
கமலா: மேடம்..
 
 
ரோஹினி: நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன். நீ என்ன பண்ண போற.

கமலா: மேடம் இப்போ ஃபை ஒர்க் எதுவும் இல்ல;நேத்தே லீவ் கேட்டிருந்தேன் மேடம்... நான் வீட்டுக்கு போலாமான்னு..

ரோஹினி: நத்திங்க் டூயிங்.

(சற்றே யோசித்து விட்டு..)

ஓகே.  அரவுண்ட் த்ரீ ஓ க்ளாக் ப்ளவுஸ் கிடைக்கும்னு சொன்னாங்க தானே காலைல கால் பண்ணும்போது... நான் எப்பவுமே என்னோட ட்ரெஸ் தைக்கற இடம் தெரியுல்ல;

கமலா: எஸ் மேடம்

ரோஹினி: அங்கே போய் என்னோட ப்ளவுஸ் ரெண்டு கொடுத்திருக்கேன். அத வாங்கிட்டு வந்து என்கிட்ட கொடுத்துட்டு போய்டு..

கமலா: ஓகே மேடம்.

ரோஹினி: கால் பண்ணி பாத்துட்டு போ..

(ரோஹினி படிகளில் ஏறி செல்கின்றாள்;)

--------------------------------------------------------------



(கமலா சோகமாக மீண்டும் டைனிங்க் ஹாலுக்கு வருகின்றாள்; சாப்பிட்டு கொண்டிருந்த தட்டில் மீதமுள்ள சாதத்தை பிசைந்து கொண்டே யோசித்து கொண்டிருக்கின்றாள்;)

மீனாட்சி: இந்தாங்கக்கா உங்க ஃபோன்.

கமலா: என்ன பொழப்பு மீனாட்சி இது; உருப்படியா ஒரு வேலையும் இல்ல; ஆனா, கூடவே வீட்டுக்கு கூட்டிட்டு வந்து ஒக்கார வச்சிருக்காங்க;

மீ: ஏன்?

கமலா:(ஹாலை நோக்கியபடியே) இன்னைக்கு முக்கியமான ஃபைல் சைன் ஆயிருக்கு; இன்னொரு ஸ்கூல் ஆரம்பிக்கறது அப்ரூவல்; ஆனா, எல்லா ரிக்வயர்மெண்ட்ஸும் ஃபுல்ஃபில் ஆகல; கொஞ்சம் தில்லு முல்லோடதான்; உடனடியா ஸ்டாஃப் மூலமா வெளியில விஷயம் தெரியக்கூடாதுன்னு...

மீ: (படிக்கட்டு பக்கம் பார்த்தபடி) ம்ம்ம்

 கமலா: நான் எங்க எல்லார்கிட்டயும் சொல்லிடுவேனோன்னு... இங்க கூட்டிட்டு வந்து ஒக்கார வச்சிருக்காங்க; இல்லைன்னா என்ன அப்போவே ஸ்கூலுக்கு அனுப்பி... ஒரு  மூட்டை வேலைய என் தலையில கட்டி அனுப்பி வச்சிருப்பாங்களே...
ம்ம்: அதானா.. சங்கதி...

 (கமலா சாப்பிட்டு முடித்தாள்)

கமலா: (சுற்றும் முற்றும் பார்த்து) இவங்க தூங்கனுன்னா கூட எந்நேரமும் வீட்டுக்கு வர முடியுது; ஆனா, என்னால.. பாரு.. வேலையே இல்லைன்னாலும் வீட்டு போக முடியல... இரு ஒரு ஃபோன் பண்ணிடறேன்.

 (மீனாட்சி சமையலறைக்குள் பாத்திரங்களை எடுத்து வைக்கின்றாள்)

கமலா:(அலைபேசியில்)
சிவா டெய்லரிங்கா?
..
ஆமா
..
3 ஓ க்ளாக் சொனீங்க
..
சரிங்க
..
தாங்க்ஸ்.
.
(பெருமூச்சு விட்டபடி) கஷ்டம்...

மீ: இப்போ என்னாச்சு;

கமலா: ஒன்னுமில்ல; காலைல நான் கேட்டப்பவே ஹோம் டெலிவரி பண்ணிடுவோம்னு சொன்னாங்க; அதுக்கு இப்போ ஆள் அனுப்பிட்டாங்களாம்; அதனால நான் போக வேண்டாம்.
மீ: அக்கா கிட்ட இதபத்தி சொல்ல வேண்டியதுதானே..
(மீனாட்சி ஒரு தட்டை எடுத்து தனக்கு சாதம், குழம்பு, பொரியல் எடுத்து சமையலறை சுவற்றில் சாய்ந்தாஅறு சாப்பிட ஆரம்பிக்கின்றாள்)

கமலா: எதுக்கு? எப்படியும் என்னை அவங்க அனுப்பறதா இல்ல; என்ன சொல்லி என்ன பிரயோஜனம்? சரி விடு. அவருக்கு ரெண்டு வாரம்தான் லீவ். இப்போவே ஒரு வாரம் முடிஞ்சி போச்சு; பிள்ளைங்க ரெண்டும் அவர அட்டையா ஒட்டிட்டு இருக்குங்க; ஸ்கூல் கூட்டிட்டு போறது; வர்றது; கடைக்கு போறது; மொட்ட மாடியில வெளையாடறதுனு; பாக்கவே சந்தோஷமா இருக்கு; பக்கத்துல இருந்து பாக்க இன்னும் இன்னும் ஆசையா இருக்கு;
கொடுத்து வைக்க மாட்டேங்குது;

மீ: (சாப்பிட்ட படியே)ம்ம்ம்

 கமலா: கல்யாணம் ஆன ஒடனே என்னை பி.எட் படிக்க வச்சாரு; கடன் வாங்கி தான்; இந்த ஸ்கூல்ல டீச்சரா சேர்ந்தேன்; மொத புள்ள பொறந்தான்; இவரு வேலை செஞ்சிட்டு இருந்த கம்பெனிய மூடிட்டாங்க; நானும் 3வது மாசமே ஸ்கூல்ல திரும்ப வேலைக்கு போயிட்டேன்; இவரு மஸ்கட் போயிட்டாரு; அப்புறம் ரெண்டாது பொண்ணு; 6 வருஷம் ஆச்சு அவரு மொத மொத வெளிநாடு போய்; வருஷம் ஒரு தடவ வருவாரு;

மீ:ம்ம்ம்

 கமலா: என் புள்ளைங்களுக்கு நான் ஒரு அம்மான்னா, என் மாமியாரு இன்னொரு அம்மா; ஆனா, பிள்ளைங்க ரெண்டும் ஒரு கட்டத்துல அவங்கள 'அம்மா'னு கூப்பிட ஆரம்பிச்சுது; சட்டுன்னு நிறுத்திட்டாங்களே.. 'என்ன பாட்டின்னுதான் கூப்பிடனும்னு'; எப்டியோ ஆயிடுச்சு; அவங்களுக்கு நான் துணை; எனக்கு அவங்க துணை; ஆரம்பத்துல, அவங்க என்மேல இவ்ளோ கரிசனம் காடினது இல்ல; என்ன பிடிக்கலையோன்னு கூட நெனச்சிருக்கேன்; அப்போ அதெல்லாம் புரியாத சின்ன வயசு எனக்கு; ஹ்ம்ம்ம்

 மீ : கொடுத்து வச்சவங்க தான் நீங்க;

கமலா:(ஏக்கமாக முகத்தை வைத்தபடி) என்ன சொல்லு மீனாட்சி, எவ்ளோதான் பிள்ளைங்க வருஷம் பூர பிரிஞ்சிருக்குற அப்பாகிட்ட வெளையாடுறத பாக்க சந்தோஷமா இருந்தாலும்.. நானும் அவரும் மட்டும் ஒரு மணி நேரமாவது விட்டில இல்லைன்னா வெளியில போயிட்டு வரனும்னு ஆசையா இருக்கு; இன்னைக்கு காலையில  வேல முடிஞ்சவுடனேயே... மேடம்கிட்ட ஹால்ஃப் டே லீவ் கேட்டேன்; ப்ம்ச்ச்... விடல..

மீ: ஹா ஹா ஹா. இவ்ளொ தானா விஷயம்; நீங்க வேணா.. புள்ளைங்க எல்லாம் தூங்கிட்ட ஒடனே, அவர கூட்டிட்டு மொட்ட மாடிக்கு போங்க; 'க்ரீடம்' த்ரிஷா மாதிரி;

கமலா: அட.. அப்படி பண்லாம் இல்ல; ஹா ஹா

 மீ:அப்புறம் என்ன; இன்னைக்கு பௌர்ணமி வேற... தேனிலவு கொண்டாடுங்க;

கமலா: ஹா ஹா ஹா

 மீ:  யப்பா சிரிச்சிட்டீங்களா?
 
கமலா: அய்யோ.. மறந்தே போச்சு; உன் பையன் எப்படி இருக்கான்? சொல்லு?

மீ: அக்கா, இன்னைக்கு டாக்டரு லீவாம். அந்த நர்சு தான் பத்து கட்டு போட்டு கொஞ்சம் மருந்தும் கொடுத்து அனுப்பியிருக்காங்க; நாளைக்கு டாக்டருகிட்ட காட்ட வர சொல்லியிருக்காங்க;  வாந்தி எடுத்தா மட்டும் ஒடனே பக்கத்துல் இருக்கற எதாவது டாக்டருகிட்ட காமிக்க சொல்லியிருக்காங்க.

கமலா: ம்ம்

 மீ: தூங்கி எழுதானாம். ஒரே ஜீரமாம்... அவன் பாட்டுக்கு பால்வாடி போயிட்டு இருந்த புள்ள. தன்கச்சி கூட்டிட்டு போய்டு, கூட்டிட்டு வருவா... அவ ஒத்தாசை இல்லாம.. நான் இவன வளத்திருக்கவே முடியாது... அன்னைக்கு நான் இங்க வந்து வேலையெல்லாம் முடிசு...பிரசவ வலி வந்தப்போ... இவதான் இவதான் ஓடோடி வந்து என்னை கூட்டிட்டு போய் ஆஸ்பத்திரியில சேத்தவ...

கமலா:ம்ம்ம்

 மீ:புள்ள பெத்து ஒரு மாசம் தான் இருக்கும்; அக்கா அவங்க அம்மா வீட்டுக்கு வந்தப்ப, என்னைய அவங்க பாக்கனும்னு எ அம்மாகிட்ட சொல்லிவிட்டாங்க. போய் பாத்தேன் கைல புள்ளையோட. அவனுக்கு ரோஹன்னு பேரு வச்சதே அக்கா தான்... நெசமா.. அவங்க ராசி, நட்சத்திர்மாம்.

கமலா: ம்ம்ம்

 மீ: அவங்களுக்கு புதுசா வந்த பொண்ணு சேட் ஆகலையாம். 'நாளைக்கே வந்துரேன் மீனா' நு சொன்னாங்க... நான் ஒரு வாரம் டைம் கேட்டு... என் தங்கைக்கு பால் கலக்கி கொடுக்க கத்து கொடுத்து... அன்னைல இருந்து அவ தான் பாத்துக்குறா..

கமலா: பால் பவுடர் விலை உனக்கு கட்டுபடி ஆச்சா..

மீ: அது எப்புடி. ஒரு டப்பாவ தெறந்தா ஒரு வாரத்துல காலி ஆயிச்சே... அக்கா தான் 2 மாசம் டப்பா வாங்கி கொடுத்தாங்க.. அப்புரம் இந்த பாலே குடிக்க பழக்கிட்டோம்; அக்கா... எனக்கு 500 ரூவா சம்பளத்துள ஏத்தி கொடுத்தாங்க... தெரியுமா...

கமலா : (வாசல்பக்கம் பாத்து) அவங்களுக்கு காரிய்ம் நடக்கனும்..

மீ: அப்படி சொல்லாதீங்க அக்க... அவங்க புள்ள போட்ட சட்டை, அவனோட பழைய பொம்மை எல்லாம் ரோஹனுக்கு தான்.

கமலா: (மெல்லிய, கண்டிப்பான குரலில்) நீ யோசிக்கவே மாட்டியா மீனாட்சி; காலைல உன் பையனுக்கு அடிபட்டுடுச்சின்னு நீ சொன்னப்போ.. அவங்க கண்டுக்கவே இல்லையே..

மீ: அது...

கமலா: அது?

மீ: அது... அக்கா அப்படித்தான். எப்பவும் . அவங்க மூடு பொருத்து. அவங்க சந்தோஷமா இருந்தா... நம்ம கிட்டயும் அன்பா இருப்பாங்க.. நீங்க வேணா பாருங்க.. என்கிட்ட நாளைக்குள்ளார என் பையன் பத்தி விசாரிப்பாங்க...

 (கமலா எதோ சொல்ல வாயெடுக்க, வாசலில் வாச் மேன் குரல் கேட்கின்றது)

 'ஹோம் டெலிவரி மேடம்; இதொ பில்'

-------------------------------------------------

No comments:

Post a Comment